Friday, March 10, 2017

கைலாயநாதனுக்கு ஒரு பிரதோஷக் கடிதம்.

கைலாயநாதனுக்கு ஒரு பிரதோஷக் கடிதம்.
========================================
எங்கே இருக்கிறாய் நீ?
ஊர்பற்றி எரிகையில்
ஒளிந்துகொண்டிருப்பதில் அர்த்தமில்லை;
தெளிந்த நின் பார்வையில், யார் இங்கே நல்லவர் என்று
புள்ளி விவரம் எடுக்கச் சொன்னேனா சொல்!
ஊரில் உன்பெயர் துதிப்போர் பலரும்
மார்பில் உன்னை மனமாரக் கொண்டவரோ?
வேர்வரை விஷங்கொண்டோர்  விறகாய் உனைக்கூட,
யாருக்கேனும் விற்றிடுவர் யாத்திரை எனும்பேரில்.
அமணன் நீயென்று ஆருடம் பேசாதே;
எமனை எப்போதும் துணைக்கு வைத்துக்கொள் .
விண்ணில் உன்னை விரட்டுவோர் எவருமிலர் ;
மண்ணில் மனதாரப் பொய்கலந்து போற்றி,
எண்ணி முடிப்பதற்குள் எடுத்தெறிவர் கடலுக்குள்.
ரகசியமாய் உயிர்போக்கும் ராட்சசர் மத்தியிலே,
உரசிடும் உண்மைகள் ஒருநொடியில் உயிர்சாயும்.
பரமனைக்கேள் ன் படைப்பினை பரிகசித்து!
பரந்தாமன் வசம்சொல்  நீ பார்த்ததும் பயந்ததும்!
நீ நெற்றிக்கண்ணை நீண்டகாலம் மூடிவைத்தும்
தீ பற்றியிங்கே எரியுதய்யா தீராக் கொடுமைகளாய்!
இனியும் நீ ஒளிந்திருக்க நியாயமுண்டோ?
வினைதீர்க்க சூலமுடன் வேலும் சேர்த்து,
விரைந்துவா வீழ்ந்திடும் நல்லோர் காக்க.
                                                      ப. சந்திரசேகரன்.            

No comments:

Post a Comment