Thursday, December 21, 2023

நீதியே நீ நிரபராதியா?

நீதியே,

நீ புயலின் அகதியோ,

புடைத்துத் தள்ளிய

மழையின் மீதியோ?

மனதின் பீதியோ

மரபணு மாற்றிய

மானுடச் சதியோ?

மூடிய விழிகளை

மூர்க்கர் தாக்கிட,

பார்வையில் பட்டது

பாம்போ பதரோ?

தீர்வினில் முளைக்கும்

தீர்ந்ததும் தீராததும்,

கூர்ந்துப் பார்ப்பதில்

குறைகளாய் படுவது,

குறைகளின் காட்சியோ

புண்பட்ட பார்வையின்

புதிய திருப்பமோ?

தானாய்த் தோண்டி

தேடிய வழக்குகள்,

தூணெனப் பற்றிட

தோன்றிடும் தடயம்,

கடவுளின் தோற்றமோ,

கண்கட்டு வித்தையோ?

ஆளுக்கோர் நீதியோ

எனுமோர் அய்யத்தில்,

நீதியே,

நீயும் குற்றவாளியோ,

இல்லை நிரபராதியோ?

ப.சந்திரசேகரன்.










2 comments:

  1. 🚿🚿நீதி எப்போதும் குற்றவாளி ஆ(வ)னதில்லை. *தாமதமாக வரச்செய்து,* குற்றவாளி ஆக்குவது, *வழக்கறிஞர்களும், நீதிபதிகளும்* தான் 🚿🚿

    ReplyDelete
    Replies
    1. தவறிடும் நீதி குற்றத்தின் நீட்சியே!

      Delete