Monday, October 16, 2023

ஜெய்ஸ்ரீராம்!

உதட்டில் 'ஜெய் ஸ்ரீ ராம்' ,

உள்ளத்தில் ராட்சசம் .

ராட்சச மென்ன 

ஜெய்ஸ்ரீ ராமனா?

தசரத மைந்தன் 

தன்னொளி தகர்க்கவோ?

மடியும் பொழுதிலும் 

மகாத்மா உதட்டில், 

"ஹே ஸ்ரீராம்"!.

கொன்றவன் ஆன்மா,

இறைவன் பாதம்

சென்றிட வேண்டி, 

விழைந்ததோர் வார்த்தை!

ஜெய்ஸ்ரீ ராம் எனும்

ஆன்மத் தேடலும்

ஆலய வேண்டலும்,

விளையாட்டு அரங்கிலும்

முழங்கிடக் காண். 

ஜெய் ஸ்ரீராமெனும் 

போர்வையில் புதைத்து,

பொய்ப்பல மறைப்பராம்

பொது வாழ்வில்.

நல்லோர் நெஞ்சினில்

நெல்லின் மணியென

நிறைந்திடும் நாமம்,

வல்லோர் வழிதனில்

வாய்வழி மெய்யாய்

வழிவழிப் பொய்யாய்,

பேயெனப் பெருத்தல்

தூய்மை தொலைத்தலே.

இறைமை என்பது

இடைவழி அல்ல!

முறைமை ஆகிடின்

முழுவதும் இறையாம்.

இறைமை இல்லா

ஸ்ரீராம் நாமம்

மறைநூல் அறியா

மமதை மொழியே!.

            ப.சந்திரசேகரன்.











1 comment:

  1. ....இறைமை என்பது
    இடைவழி அல்ல!
    முறைமை ஆகிடின்
    முழுவதும் இறையாம்...ஒலிப்பது எங்கும் இடைவெளி இல்லா இறையின் நாமம்

    ReplyDelete