Saturday, April 22, 2023

அமரர்,பேராசிரியர் திரு.மூ.பொன்னம்பலம் அவர்களின் நினைவுத் துளிகள்.

 


    ஜூலை இரண்டு,1970;விரிவுரையாளர் நியனமத்திற்கான நேர்க்காணல்; பொன்மலையிலிருந்து புத்தனாம்பட்டிக்கு வழி அறியாமல் துறையூர் சுற்றி தாமதமாக சென்றடைகிறேன்.உள்ளே அழைக்கிறார் முதல்வர்.சான்றிதழ்கள் பரிசோதனை! பின்னர் ஓரிரண்டு கேள்விகள்."The appointment of lecturer was over this morning itself.One Mr.R.Jenardhanam was appointed" என்கிறார்."Thank you Sir" எனக்கூறி நான் இருக்கையிலிருந்து எழுகிறேன்."No.No Please sit down.There is one vacancy for tutorship.I will make it as Lecturer and appoint you" என்று கூறி தனது அலுவலக உதவி யாளர் திரு.நடேச பிள்ளையை  அழைத்து, கல்லூரி அலுவலக மேலாளர் [பின்னர் அலுவலக கண்காணிப்பாளர் என்று மாற்றப்பட்டது }திரு N.துரைராஜனை வரச்சொல்கிறார்.அவரிடம் நியமன ஆணை தயாரிக்கச் சொல்லி எனக்கு வழங்குகிறார்.

  ஓருசில நிமிடங்களில்,ஒரே பார்வையில் நடந்து முடிந்தது,எனது விவிவுரையாளர் பதவி நியமனம். அந்த சில நிமிடங்களில்  அவர் மன ஓட்டம் என்னவாகியிருக்கும் என்பதை அவரே அறிவார்.அதே ஆண்டு என்னை கல்லூரி மாணவர் விடுதியின் மாணவர் ஒழுங்கு நிலை பராமரிப்பவர் களில் (Proctors) ஒரு வராக நியமித்து கல்லூரி விடுதியில் தங்கச் சொல்கிறார். அவ்வப்போது அவர் விடுதிக்கு வரும்போது உடல் ஆரோக்கியம் பேணுமாறும்,இரவில் பால் அருந்துமாறும் கூறிச்செல்வார்.

   அந்தஆண்டு கல்லூரி மாணவர் மன்ற திறப்புவிழா கூட்டத்திற்கு ஒரு சிறப்பு விருந்தினரை ஏற்பாடு செய்யுமாறு என்னை திருச்சிக்கு அனுப்புகிறார்.நானும், உறுமு தனலட்சுமி கல்லூரியின் அன்றைய முதல்வரும் எனது ஆசிரியருமான பேராசிரியர் திரு சி.எஸ் கமலபதி அவர்களை அழைக்க,அவர் மறுத்துவிட, பிறகு திரு.பொன்னம்பலம் அவர்களின் அனுமதியை தொலைபேசியில் பெற்று, அதே நாள்,பெரியார்  ஈ.வே.ரா கல்லூரியின் அன்றைய முதல்வர் திரு ஆளுடையா பிள்ளை அவர்களிடம் வேண்டுகோள் விடுக்க அவரும் ஒப்புக்கொள்கிறார்.  

   அந்த கல்வி ஆண்டு இறுதியில் ஒருநாள், கல்லணைக்கு சுற்றுலா செல்கிறோம். அங்கு மதிய உணவு முடிந்த பிறகு யாரோ ஒருவர் நான் நன்றாகப் பாடுவேன் எனக்கூற,சுமாராகக்கூவும் என்னை பாடச்சொல்கிறார்.நானும் அந்த ஆண்டு வெளிவந்த 'எங்கிருந்தோ வந்தாள்' திரைப்படத்தில் டி.எம்.எஸ் பாடிய,"ஒரே பாடல் உன்னை அழைக்கும்"என்ற பாடலைப் பாடுகிறேன் .பாடலை தன் தொடையில் தாளம்தட்டி ரசித்து,என்னை வெகுவாகப் பாராட்டுகிறார்   

  அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று குறைகிறது.என்னை அழைத்து வேறு கல்லூரியில் வேலை தேடச் சொல்கிறார். ஆனால் அதிஷ்டவசமாக,எனது சீனியர் திரு ஆர் ஜெனார்த்தனம் அரசு கல்லூரியில் சேர,என்னை அழைத்து மகிழ்ச்சியுடன்'God is great' எனச் சொல்லி இரண்டாம் ஆண்டு நியமன ஆணை வழங்குகிறார்.

  எனது திருமணத்திற்கு தம்பதி சமேதிரராய் வந்து வாழ்த்தி,பிறகு  துறையூருக்கு அருகே ஒரு கிராமத்தில் நடந்த ஒரு திருமண  நிகழ்ச்சியில் நாங்கள் சந்திக்கையில்,எனது எட்டுமாத ஆண் குழந்தையை கையில் வாங்கி,சில மணித்துளிகள் தூக்கிவைத்து,"எங்கள் கிரீன் கார்டனுக்கு இதுபோல் ஒரு குழந்தை எங்களுக்கு  பேரனாய் வேண்டும்" என்கிறார்.

   காலம் செல்ல செல்ல ஆசிரியர் சங்க போராட்டக்களமும் எதிர் வினைச் செயல் பாடுகளும்,எங்களுக்கிடையே,(வேறு பல ஆசிரியர்களுக்கும் நடந்தது போல) பாலம் தகர்த்து ஒரு கனத்த இடைவெளியை தோற்றுவித்தன.இருப்பினும்,ஒரு நீண்ட போராட்ட காலம் முடிந்து,இழந்த வேலை நாட்களை ஈடு செய்வது குறித்து நானும் பேராசிரியர் திரு.வி.கிருஷ்ணகுமாரும் முதல்வர்,பேராசிரியர் திரு பொன்னம்பலம் அவர்களை அவரது அலுவலகஅறையில் சந்திக்கையில்,"நீண்ட கால வேலையை குறுகிய காலத்தில் முடிப்பது,பேராசிரியர் சந்திரசேகரன் போன்றோரால் முடியாது. அவர் மாணவர்கள் ஒருபகுதியை புரிந்துகொண்டால் மட்டுமே அடுத்த பகுதிக்குச் செல்வார்"என்று கூறிட என் நெஞ்சம் நெகிழ்ந்தது.

  எத்தனை எதிர்த்தும் என் பணியாற்றல் மீது  இத்தனை வலுவான  மதிப்பீடா? அவரை எதிர்த்து போராடும் ஒவ்வொவொரு காலக்கட்டத்திலும் மலையென மனபலம் கொண்ட ஒருவரிடம் மோதுகிறோமே,விளைவு என்னவாக இருக்கும் என்றொரு அச்சமும், நெஞ்சுரம் நிரம்பப்பெற்ற ஒரு நபருடன் தான் மோதுகிறோம் என்னும் பெருமிதமும், எனக்குமட்டுமல்லாது என்னைப்போல் அவரை எதிர்த்து நின்ற ஒவ்வொரு ஆசியிரருக்கும்,அலுவலருக்கும் இருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.

   பணியிலிருந்து ஓய்வு பெரும் நாளன்று என் மகனுடன் சென்று நான் அவரை சந்திக்கிறேன்."Take your father to the US.Take care of him"என்று என் மகனிடம் கூறுகிறார்.ஓய்வூதியம் பெறத்தொடங்கிய பின்னர்,ஒரு சில ஆண்டுகள் அவருக்கு கடிதமும் புத்தாண்டு வாழ்த்துக்களும்  அனுப்பியிருக்கிறேன்.ஓய்வுபெற்ற சில நாட்களில் ஓமாந்தூரில் அருக்கு மிகவும் நெருங்கிய உறவினர் இல்லத்தில் ஒரு பெரிய காரியத்தில் அவரை சந்திக்கையில்,'ஓய்வுபெற்ற பின்னரும் வந்திருக்கிறீர்களே'' என்று நெகிழ்ந்தார்.

    ஒரு சில ஆண்டுகள் கழித்து எனது நண்பர் முனைவர் திரு டி. பாலசுப்ரமணியத்தின் மூத்த மகள் திருமணத்தில் திரு.பொன்னம்பலம் அவர்களுடன் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அவர் அடிக்கடி என் கனவில் வருவதை குறிப் பிட்டேன்.சிரித்தார்.வயது ஆகிவிட்டதால் எனது கடிதங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும்,தன் கைப்பட கடிதம் எழுத இயலாமைக்கு வருந்தினார். 

  இதற்கிடையே கல்லூரி நிறுவனத்தந்தை பெருமைமிகு மூக்கப்பிள்ளை அவர்களின் வாழ்கைப்புத்தகத்தை,அமெரிக்காவில் வாழும் முனைவர்  தங்கவேலு  என்பவர் எழுத இருப்பதாகவும்,அதற்கு என்னை ஆங்கில மொழியூட்டம் செய்து தருமாறும் பணித்தார்.ஆறுமாதத்திற்குமேல் திரு. தங்கவேலு அவர்களுடன் இணைந்து உருவாக்கிய அந்த நூல்,அமெரிக்க பதிப்பக விதிகள் உள்ளடக்கிய பிரச்சனைகள் காரணமாக வெளிவரவில்லை என்று அறிய நேர்ந்தது. 

   இறுதியாக நான் திரு.பொன்னம்பலம் அவர்களை சந்தித்தது,அவரது எண்பதாம் பிறந்த நாள் முடிந்து ஒரு சில மாதங்களில் அவரது இல்லத்தில்!."தீர்க்காயுசா இருங்க" என்று வாழ்த்தினார்.அவருடன் மிகவும் நெருங்கி பின்னர் விலகி நின்ற ஒரு சில ஆசிரிய நண்பர்களில் நானும் ஒருவன். ஆனால்,எங்களுக்கிடையே  ஏதோ  ஒரு இனம்புரியா ஆழ்ந்த உணர்வுப்பாலம் இருந்ததாகவே நான் அவ்வப்போது நினைத்திருக்கிறேன்.அவர் என்னைப் பற்றி என்ன வெல்லாம் நினைத்திருப் பாரோ!ஆழ் கடலல்லவா,அவர் மனம்!. இப்போது பலரின் நினைவுக்கதவுகளை தட்டி எழுப்பி,அவர் உறங்கிக்கொண்டிருக் கிறார்.

 ஓம் ஷாந்தி! ஆமென்!ஹே அல்லாஹ்!புத்தம் சரணம் கச்சாமி! தம்மம் சரணம் கச்சாமி;சங்கம் சரணம் கச்சாமி!         

ப.சந்திரசேகரன்.     

8 comments:

  1. நல்ல பதிவு, நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. நன்றி,திரு.சிவசாமி.

      Delete
  2. சிறப்பு சார்... என் கல்லூரி கால நினைவுகளை மீட்டெடுக்கும் பதிவு.... உங்கள் மாணவன் என்பதில் மிக பெருமை சார்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.மணிகண்டன்.

      Delete
  3. அருமையான பதிவு. மனித மனம் ஆழமானது, பலவித பரிமானங்களைத் தொட்டு உணர்த்திவிட்டீர்கள். நினைவலைகள் நல்லதை பேசி, ஒரு மாமனிதருக்கு அஞ்சலி செலுத்தி, வணங்க வைத்துவிட்டீர்கள். நன்றி. அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன். - முகுந்தன், பண்ருட்டி. முன்னாள் மாணவன் (1981)

    ReplyDelete
    Replies
    1. நன்றி,திரு.முகுந்தன்.

      Delete