என்னுடைய பன்னிரெண்டு வயதில் ஒருமுறை,எனது தந்தையாருடன் ரயிலில் பயணம் செய்கையில்,அவருடைய நண்பரும்,அந்த நண்பரின் என்னைக் காட்டிலும் இளைய மகனும்,உடனிருந் தனர்.ஒரு ரயில் நிலையத்தில் தாகம் என்று கூறிய எனக்கு ஒரு குளிர்பான பாட்டில் வாங்கித்தந்து,அதை அச்சிறுவனுடனும் பகிரச்சொன்னார் என் தந்தை.நான் தாகத்தில் அப்பானத்தை முழுமையாகக் குடித்துவிட,அதைக்கண்ட என் தகப்பனார் அச்சிறுவனுக்கு வேறொரு பாட்டில் குளிர் பானம் வாங்கிக்கொடுத்து,என்னிடம், மற்றவருடன் பகிர்ந்துண்ணும் பழக்கத்தின் முக்கியத் துவத்தை உணர்த்தி,என்னை கடிந்து கொண்டார்.
பின்னர்,எனது பதினான்கு வயதில் நாங்கள் வசித்த ரயில்வே காலனி ஓட்டு வீட்டின் விட்டதில் காணப்பட்ட,சிட்டுக் குருவியின் கூட்டினை நான் கலைக்கப் போக,"டேய் அத ஏண்டா கலைச்சே? ஒரு உயிரினத்தை வதை பண்றியே!"எனக் கூறி 'சொட்டேல்' என்று செவிட்டில் அறைந்தார் என் தந்தை.இவை இரண்டுமே என் வாழ்க்கைப்பாதையின் ஒழுக்கப்பாடங் களாக அமைந்தன.இவ்விரண்டு ஒழுக்க மூட்டும் அனுபவங்களில் சனாதனம் இருந்ததோ இல்லையோ,அது என் தந்தைக் கும் தெரியாது;எனக்கும் தெரியாது.அது பற்றி எனக்கு கவலையும் இல்லை.
இந்த விரிந்த விசாலமான உலகத்தில் எத்தனை நிறம் கொண்ட மனிதர்கள் ! உலகின் எல்லா நாடுகளிலும் ஒழுக்கம் நிறைந்தோர் உண்டு.மதமும் மொழியும் வேறுபட்ட மனிதரிடையே,ஒழுக்கம் என்பது உள்ளத்தில் உள்ளூறி,உணர்வுகளையும் சிந்தனையையும் திரட்டி வைத்து,சொற் களால்,செயல்களால்,ஒரு மனிதர் எப்படிப் பட்டவர் என்பதை அடையாளம் காட்டுகிறது. பழக்கவழக்கங்களும் கற்ற கல்வியும் சேர்ந்து,சாதி மதங்களுக்கப்பாற்பட்டு, நல்லதையும் தீயதையும் பிரித்துப் பார்க்கச் செய்வதே,வாழ்வியலாகும்.நல்லவர்கள் நெஞ்சில் குடியேறும் இறைவன் எனும் மன மகிமை,கருவறையையும்,தன் மூல இருக்கையையும் கடந்து,நல்லவர்களுடன் சங்கமித்து,நன்மையின் ஒளியாகிறது. அந்த ஒளிக்கு சாதி,மத,மொழியில்லை. அது ஒரு பளிச்சிடும் பரவசம்.நன்மையின் மேடையில் நர்த்தனமாடி மெய்சிலிர்க்கச் செய்வதே இறைவன் எனும் உணர்வின் இயல்பு.
என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவருக்கும் எனக்குமிடையே,எனது ஒரு சிறிய வீட்டு மனைக்கான விற்பனை ஒப்பந்தம்,வாக்கு ரீதியாக நடைபெற்று, நான் அவரிடம்,எங்கள் இருவருக்கும் இசைந்த,அந்த மனைக்கான தொகை யினை கடந்த நூற்றாண்டு எண்பதுகளில் பெற்றுக்கொள்கிறேன்.அதை அவர் தொண்ணூறுகளில் இன்னொருவருக்கு எட்டு மடங்கு விலைக்கு கிரயம் செய்கி றார்.நான் சார் பதிவாளர் அலுவலகம் சென்று,அந்த விற்பனை ஆவணத்தில் கையெழுத்திடுகிறேன்.அவர் அந்த கிரய வித்தியாசத் தொகையில் ஐந்து விழுக் காட்டினை,என்னுடன் பகிர்கிறார்.அவர் என்மீது வைத்திருந்த மித மிஞ்சிய நம்பிக்கைக்கும்,அந்த நம்பிக்கை கெடாமல் பார்த்துக்கொண்ட எனக்குமிடையே நிலவிய ஒழுக்கக் கதிர்வீச்சின் அளவு கோல் என்ன?அதை கற்றுத்தந்தது சனாதனமா?அது பற்றி எனக்குத் தெரி யாது.தெரியவேண்டிய அவசியமுமில்லை. இதிலும் அந்த நண்பர்,ஒரு இஸ்லாமியர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனது சொந்த அனுபவங்களில் மூன்றை மட்டுமே இங்கே குறிப்பிட்டேன். இன்னும் பல இருக்கக்கூடும்.இதுபோல் ஒவ்வொரு வர் வாழ்விலும் வேரூன்றிய அனுபவங்கள் வாழ்க்கை எனும் இலக்கியத்தில்,கவிதை களாய்,சிறுகதைகளாய்,புதினங்களாய், கட்டுரைகளாய்,நாடகங்களாய்,தினப்பக் கங்களை உள்ளடக்கி காப்பியங்கள் படைப்பதை,சம்பந்தப்பட்டோர் அறிவர். ஒழுக்கத்திற்கு சாதியில்லை;மதமில்லை. அவரவர் மனதின் அழுக்குகளை சுத்தம் செய்யும் நேரத்தில்,ஒவ்வொரு மனிதரும் சூத்திரரே.
வயிற்றுப் பசிபோக்கும் உணவும்,மானம் காக்கும் உடையும்,மூளையினை மூலைக் குள் முடங்கச்செய்யா கல்வியும்,எல்லோர்க் கும் கிடைக்கச் செய்வதில்,மதத்தினைக் கடந்து முந்தி நின்று,அரசாளும் ஆற்றலே, மனிதம் தழைக்கச் செய்யும். நன்னூல், ஆத்திச்சூடி,கொன்றை வேந்தன், திருக்குறள்,நாலடியார் மற்றும் பல நெறியியல் நூல்கள் நிரம்பிய வற்றா நதி யாம்,தமிழ் மொழி!.வாழ்க்கையின் வரம்பினுள் ஒழுக்கம் ஒரு வீச்சு;அல்லது உரைகல்.அதற்கு ஒவ்வொரு மனிதரின் உள்ளமே ஊற்று.
மண்ணில் வாழும் ஒவ்வொரு மனிதரும் யாரோ ஒருவரால், அல்லது சிலரால் ஈர்க்கப்படுகின்றனர். இப்படி ஈர்க்கப்பட்ட பலரும் வேறொரு நபரையோ,அல்லது சிலரையோ,ஈர்க்கின்றனர்.இந்த ஈர்ப்பே, ஈர்ப்பவரின் குணம் அனுசரித்து, நன்மை தீமையாகிறது. ஈர்ப்புக்குள் அடங்கிய பலரும் வார்ப்புகளாகி,சமூகம் என்றாகின் றனர்.அவர்கள் மேடையேறி சனாதனப் பாடமோ, வேறு மதப்பாடங்களோ நடத்துவ தில்லை.அப்படி நடத்தினால் மட்டுமே, ஒழுக்கம் என்பது உயரப்போவதுமில்லை. அன்றாட காலக் கடலில் மனிதர்கள் நல்லவர்களாய், தீயவர்களாய் கரைகின் றனர்.நல்லொழுக்கம் பேணுவோர்க்கு,
ஒழுக்கம் விழுப்பந் தரலான்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்
எனும் வள்ளுவர் வாக்கு,அவர்கள் அறிந்தும் அறியாமலும்,அவர்களை வழி நடத்துகிறது எனும் கருத்தியலையும் மறுப்பதற்கில்லை.
ப.சந்திரசேகரன்.