வலிக்குது!வலிக்குது!
வம்புகள் சண்டைகள் போடவில்லை;
கும்பிடும் சாமியில் குறைகள் இல்லை.
வாழ்க்கையில் சறுக்கல்கள் ஏதுமில்லை;
வீழ்ந்ததன் காயங்கள் பழுக்கவில்லை.
ஆனாலும் வலிக்குது!
கொம்புகள் சீவிடும் கொடியோர் மத்தியில்,
நம்பிக்கை துரோகம் செய்வோர் வளர்ச்சியில்,
சூழ்ச்சியே சொத்தென குவிப்போர் இடையில்,
ஆழ்மனக் கசடுடன் அறக்குரல் ஒலிக்கையில்,
வலிக்குது.வலிக்குது.
நம்பிடும் நீதி,நியாயங்கள் கடக்கையில்,
வெம்பிய பழங்கள்,இனிப்பென சுவைக்கையில்,
தாழ்த்திப் பேசுவோர்,தரநிலை காண்கையில்,
வாழ்த்திடும் நெஞ்சங்கள்,வாட்டத்தில் சரிகையில்,
வலிக்குது.வலிக்குது.
பலிக்கு ஆடுகள்,பட்டியில் நின்றிட,
பலமே ஆளுமை,என்பவர் வாளேந்த,
நிலமதன் சுமையினில்,நீள்புவி நடுங்கிட,
தலைகள் உருளுமோ என்றொரு தவிப்பினில்,
வலிக்குது,வலிக்குது!
மனமெலாம் வலிக்குது.
ப.சந்திரசேகரன்.
No comments:
Post a Comment