மண்ணைப் பிரிப்பதில்,
மனிதர்களே மண்வெட்டிகள்.
அன்பைப் பிளப்பதில்,
ஆதிக்கவாதிகளே கோடரிகள்.
அணுகுண்டின் ஆரவாரம்
அழிவுகளின் அவலமாய்,
திக்கெட்டும் திகில்பரப்பும்.
போர்முனைப் பந்திகளில்,
மொய்விருந்திற் கிடமில்லை;
பொய்விருந்தே புழுதியாகி
உயிர்பலிகள் உணவாகும்.
அப்பாவி உயிர்கள்பல
ஒப்பாரி ஓலங்களில் ,
தப்பான தலைமைகளை
ஒப்பாமல் பறையடிக்கும்.
உலகமெங்கும் அக்கப்போர்;
உயிர்மேயும் அரக்கற்போர்.
நாடுகள் கூடியிங்கே
நல்லதைச் சொன்னாலும்,
கூடிடும் நாடுகளில்
குறைசொல்லும் தகுதியிங்கே,
சொல்பவர்க்கு இல்லையெனும்
சொல்லெல்லாம் வில்லாகி,
கூட்டமைப்பு கொள்கைகளை
கூத்தாடிக் கதையாக்கும்.
மனிதம் உறங்குகையில்
மிருகத்தின் குரலுயர்ந்து,
மறைநூல் பறைசாற்றும்.
அறநெறி அற்றோரின்
ஆணவப் போர்க்களத்தில்,
மன்றாடும் மனிதக்குரல்
மண்ணோடு பொசுங்கிடுமாம்,
அணுகுண்டுக் கிரையாகி!
பொற்காலப் புத்தகங்கள்,
போர்க்கால பக்கங்களை
புதுப் பதிவாக்கிட,
நாற்காலி ஆட்டத்தில்
நலிவுற்றோர் நசுங்கிடவே,
நரபலிகள் கூடிடுமாம்.
மதயானைக் காலடியில்,
பதுங்கிடுமோ பைங்கிளிகள்?
நிதமிங்கே காண்பதெல்லாம்
நீள்புவியின் நரபலியே!
No comments:
Post a Comment