Monday, February 7, 2022

சிக்கலோ சிக்கல்

திக்குகள் எட்டு.

திக்கித் திணறிடினும் 

சிக்குவோர் செவிகளில் 

சிக்காமல்  எட்டுதில்.

சிலருக்கு சிக்கல். 

முட்டுச் சந்தில் 

முட்டிடும் வேளையில், 

முந்துவதில் சிக்கல்! 

முட்டிடும் மாட்டிடம்

சட்டெனச் சிக்கிட, 

முட்டாமல் தப்புவதில் 

மூச்சுக்கு சிக்கல். 


வக்கற்ற வறியோர்க்கு

வாழ்க்கையே சிக்கல்  

அக்கம் பக்கம் 

அறியாமல் இருந்து 

பக்கத்து வீட்டையே    

பார்த்து பழகாதவனுக்கு,  

பாதைகள் மாறிடின் 

வழியெலாம் சிக்கல். 


விக்கிடும் வேளையில் 

உண்பதில் சிக்கல்; 

சிக்கிடும் உணவது 

தொண்டையில் சிக்கிட ,

சேர்ந்திடும்  விக்கல். 

வக்கனைப் பேச்சினில்

வளர்ந்திடும்  சண்டையில் 

வாட்டிடும் சிக்கல் .


மக்கும் குப்பையும் 

மக்கா குப்பையும் 

பக்குவமாய் பிரிப்பதில் 

படர்ந்துவரும் சிக்கல். 

மக்குப் பிள்ளை, 

திக்குகள் எட்டிலும் 

தட்டுத் தடுமாறி 

தக்கவை தேடுதில்  

தடைகளாய்  சிக்கல். 

எக்கரை ஆயினும்  

திக்குகள் அறியுமோ, 

தக்கவை தகாதவை? 


அக்கினி குண்டமாய் 

அமைந்ததோர் வாழ்வில் 

துக்கமும் துரோகமும் 

துரத்தி விரட்டுகையில். 

விக்கலிலும் சிக்கலிலும்

வீழ்ந்து தவிப்போர்க்கு, 

தக்கவை,தகாதவை, 

திக்குகள் எட்டுமே!     

             ப.சந்திரசேகரன்.    

         

 

No comments:

Post a Comment