"தமிழன் என்றொரு இனம் உண்டு
தனியே அவர்க்கொரு குணம் உண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்;
கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்;
மானம் பெரிதென உயிர் விடுவான்
மற்றவர்க்காக துயர்ப் படுவான்
தானம் வாங்கிடக் கூசிடுவான்
தருவது மேலெனப் பேசிடுவான்
ஜாதிகள் தொழிலால் உண்டெனினும்
சமரசம் நாட்டினில் கண்டவனாம்
நீதியும் உரிமையும் அந்நியர்க்கும்
நிறை குறையாமல் பண்ணினவன்".
எனும் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பாடல் 'மலைக்கள்ளன்' திரைப்படத்தின் தலைப்புப்பாடலாக இடம்பெற்றது. கலைஞர் திரைக்கதை வசனம் எழுதி,எம்.ஜி.ஆர் நடித்து,மாபெரும் வெற்றிபெற்ற பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் தயாரித்த இத்திரைப்படம், கலைஞர்+ எம்.ஜி.ஆர் எனும் இருவரும்,தமிழின் பெருமையையும்,தமிழ்ச் சமூதாயத்தின் பாரம்பரியத்தையும் கட்டிக்காக்க இருக்கிறார்கள் என்று கட்டியம் கூறியது.
பெரியார் அண்ணா இருவரின் அரவ ணைப்பில் வீரியம் பெற்று,சாதி சமயங் களுக்கு அப்பாற்பட்டு,சமூக நீதிக்குரலை ஓங்கி உரைத்த இரட்டை குழல் துப்பாக்கி களே கலைஞரும் எம்.ஜி.ஆரும்.ஒருவர் தரமான தமிழாலும் இன்னொருவர். தேர்ந்தெடுத்த கதாபாத்தி ரங்களினா லும்,தமிழ் மக்களின் மனங்களை ஆழ உழுது,மதம் சாரா சமத்துவ விதைகளை விதைத்தனர். வெள்ளித்திரையின்மூலம் வாழ்க்கையின் விரிவான கோலங்களை வரைந்த பெருமையும்,தமிழகத்துக்கான திராவிட அடித் தளம் கொண்ட, எடுத்துக் காட்டான அரசியல் பாதை ஒன்றினை வகுத்த பெருமையும்,இவ்விருவருக்கும் உண்டு.
, போலி மதவாதத்தை"கோவில் கூடாது என்பதற்காக அல்ல;கோவில் கொடியவரின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக'' என்று ஆவேசமாக பராசக்தி திரைப்படத்தில் வசனமாக வெடித்தார் கலைஞர். எம்.ஜி.ஆர், அதே ஆவேசத்துடன் மலைக்கள்ளன் திரைப்படத்தில் ,
"பக்தனைப் போலவே பகல்வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம் நாட்டிலே!:
என்று போலி மதவாதிகள பாடலால் நைய்யப்புடைத்தார்.
எம்.ஜி.ஆர் கலைஞருடன் கைகோர்த்த 'மலைக்கள்ளன்'திரைப்படத்தில் 'எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' எனும் அப்பாடலில்,சமூக நீதி பறைசாற்றும் வண்ணம்,
"தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
கல்வி தெரியாத பேர்களை இல்லாமல் செய்வோம்
கருத்தாக பல தொழில் பயிலுவோம்
ஊரில் கஞ்சிகில்லை என்ற சொல்லினை போக்குவோம்
ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
அதில் ஆய கலைகளை சீராக பயில்வோம்
கேளிக்கையாகவே நாளினை போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாக திரட்டுவோம்"
என்ற கொள்கையும் செயல்திட்டமும் கொண்ட வரிகளும்,இடம் பெற்றிருந்தன.
சுய மரியாதை,சமூக நீதி கருத்துக்கள் கொண்ட கலைஞரின் அனல் பரப்பும் வசனங்கள் இடம்பெற்ற திரைப்படங்களும், புரட்சிப் பாடல்கள் உள்ளடக்கிய எம்.ஜி.ஆர் திரைப்படங்களும், தமிழகத்தின் சமூக, அரசியல் பார்வையினை, முன்னேற்றப் பாதையில் மாற்றியமைத்தன.
திரைப் படங்கள் மட்டுமே மக்களின் பொழுதுபோக்காக இருந்த ஒரு காலக் கட்டத்தில்,மக்களை எளிதில் சென்றடையும் திரைப்படங்கள் மூலம்,கலைஞரின் வசனங்களும்,எம்.ஜிஆருக்காக டி.எம்.சௌந்தராஜன் பாடிய பாடல்களும், ஏற்ற தாழ்வற்ற,சாதி சமயமற்ற சமுதாயம் உருவாக்க வேண்டும் என்ற தாக்கத்தினை, பெருவாரியான மக்கள் மனதில் ஏற்படுத்தியது.அப்படிப்பட்ட தாக்கத்தினால் எழுந்த மக்களின் மனமாற்றமே,1967-இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று,முதல் முறையாக ஆட்சியைப் பிடிக்க ஏதுவானது.
எம்.ஜி.ஆர் தமிழ் மண்ணில் பிறக்க வில்லையென்றாலும்,திராவிட சிந்த னையும், சமத்துவ நிலைப்பாடும்,சமூக நீதி கோட்பாடும்,மத நல்லிணக்கமும், நான்கு எல்லைக்கற்களாகக் கொண்டிருந்தார் என்பது அவர் தேர்ந்தெடுத்த கதைக்கரு, கதாபாத்திரம்,மற்றும் பாடல் வரிகள் மூலம்,தெள்ளத்தெளிவாயின.
'தனி உடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா'
என்றும்,
"கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்"
என்றும்,
"எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்"
என்றும்,
"உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமூதாயம் காண
என்ன வழி என்று எண்ணி பாருங்கள்
அண்ணா சொன்னவழி கண்டு நன்மை தேடுங்கள்".
என்றும்,
"புத்தன் இயேசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்காக தோழா
ஏழைகள் நமக்காக"
என்றும்,
முன்பு இயேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
என்றும்,
"மனதுக்கு மட்டும் பயந்துவிடு
தன் மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு"
என்றும்,பல்வேறு பாடல்கள் மூலம் பொதுவுடைமை சித்தாந்தம்,சுய மரியாதை, சமதர்மம், ஒருமதம் சாராமை, தன்னிறைவு, தன்மான உணர்வு,போன்ற தனது தெளி வான கொள்கை மேலாண்மையினை, அவ்வப்போது அழுத்தம் திருத்தமாக மக்களிடம் கொண்டு சென்றார்.
ஏதோ காலத்தின் கட்டாயமாக,இருபது ஆண்டுகளுக்குமேல் ஒரே அணியில், ஒரே அரசியல் சித்தாந்தத்தின் கட்டுப்பாட்டில் பயணித்த,மாபெரும் மக்கள் சக்தி ஆட் கொண்ட,கலைஞர் எம்.ஜி.ஆர் எனும் இரண்டு அரிய ஆல மரங்கள்,வேறு வேறு திசை மாறிய விருட்சங்களாய், அவரவர்கள் பாணியில், 'நெஞ்சுக்குநீதி'யுடன் 'உயிரினும் மேலான கழக உடன்பிறப்புக் களே' என்றும் 'ரத்தத்தின் ரத்தமான என் உடன்பிறப்புக்களே' என்றும் தமிழ்ச் சமூ தாயத்தை தொடர்ந்து சமூக நீதி நிழலில் இளைப்பாறச்செய்தன.
எதிர் எதிர் நிலைப்பாடுகளில் இருந்தாலும் எம்.ஜி.ஆர் தனது ஆரம்ப அரசியல் பள்ளி யினை மறக்கவில்லை.வலதுசாரி இயக்க மும்,மதவாதமும், அவரின் ஆட்சிக் காலத் தில் ஒருசில நேரங்களில் அவரை திசை திருப்ப முற்பட்டபோதும்,சமத்துவம், சமதர்மம்,மத நல்லிணக்கம் எனும் வரை யறைகளிலிருந்து அவர் நீங்காமல் இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றைக்கு இந்த இரண்டு மாபெரும் தலைவர்கள் இல்லாத சூழலில்,புரட்சித் தலைவரைக் காட்டிலும் புரட்சித் தலை விமீது அதிக பற்றுதல் வெளிக் காட்டிய எம்.ஜி.ஆர் தொடங்கிய இயக்கத்தின் முக்கிய தலைவர்கள்'அம்மா'என்று சொல்லி சொல்லியே நாட்களைக் கடத்தி யவர்கள்,அம்மாவையும் இழந்து, தனித்து தேரோட்டமுடியாமல் தள்ளாடிக் கொண்டி ருக்கின்றனர். கொள்கை ரீதியாக தி.மு.கா வுடன் வேறுபாடுகள் அதிகமில் லாத எம். ஜி.ஆர் உருவாக்கிய,அரசியல் அமைப்பு, தடம்புரளும் அபாயத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது.
எம் ஜி ஆரும்,அவருக்குப்பின்னால் அ.இ.அ.தி.மு.க வின் தொண்டர் பலமும் மக்கள் செல்வாக்கும் கொண்டிருந்த செல்வி ஜெயலலிதாவும் மறைந்த பிறகு, தங்களின் நிழலே நிஜம் என்று நம்பிக்கொண்டிருந்த இன்றைய இரட்டைத் தலைமை,
"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா"
என்று நெஞ்சு நிமிர்த்த முடியாது,மாநில மரபை தேசிய கடலில் கரைத்துக் கொண் டிருக்கின்றனர்.
தமிழகத்தடாகத்தில் நான்கு தாமரை மலர்களைக் கண்ட தேசியக்கடல், சீறி எழுந்து ஒரு கட்சியின் வெற்றிடத்தினை நிரப்பும் முயற்சியில் 'அலைகடல் ஓய்வ தில்லை'எனும் பாணியில்,எம்.ஜி.ஆர் குரலாக,ஒலிக்கத் தொடங்கியிருக் கிறது.
விரிவாக்கச் சிந்தனையில் வேரூன்றி யிருக்கும்தேசிய கட்சியின் ஆக்ரமிப்பு முயற்சியினை,அரசியல் சதுரங்க ஆட்டத் தின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டாலும், அண்ணன் தம்பிகளாகவோ அல்லது பங்காளி களாகவோ பயணித்தவர்களின் வரப்புத் தகராறில்,அடுத்தவர் நுழை வது ஆபத்தே.
மாபெரும் தலைவர்களின் மறைவால் மாறிவரும் ஆட்டக்களத்தில்,அறிவாற்ற லும்,ஆளுமைத்திறனும் லட்சியமும் கொண்டு, ஆட்சி நெறிமுறைகளை காலத்துக் கேற்ப அமைதியாக வகுத்துவரும் தமிழக முதல்வர் திரு.ஸ்டாலினின் பங்கு, தற் போது மிக முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதப்படுகிறது.தி.மு.க வின் பலம் எழுபது ஆண்டுகளைக் கடந்து இன்றும் எழுச்சி யுடன் இருக்கிறது.எனவே ஆட்கள் சேர்க்க வேண்டிய அரசியல் நிர்பந்தங்கள் அக் கட்சிக்கு இல்லை.ஆனால், தமிழ கத்தை, எதிர்கால. தமிழ்ச் சமூதாயத்தின் விதை களை,மதவாத மண் ஆட்கொள் ளாமல் பார்த்துக் கொள்ளவேண்டிய மா பெரும் பொறுப்பு,இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது.
தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க உட்பட பெரும்பாலான கட்சிகள் மத நல்லிணக்கம் பேணும் கட்சிகளே.ஆனால் 2016-க்குப் பிறகு,பதவியை காப்பாற்றிக்கொள்ள இந்திய தலைநகருக்குள் தஞ்சம் புகுந்த வர்கள்,ஏதோ ஒரு வகையில் பொறியில் சிக்கிய எலிகள் போல, மதசார்புடைய, சமத்துவம் பேணாத கரங்க ளில் சிக்கி விட்டார்களோ என்பதும், அதனால்தான் இன்றைக்கு எம்.ஜி.ஆர் எனும் மூன்றெ ழுத்து,வடக்கே இருந்து திடீரென மணம் வீசத் தொடங்கு கிறதோ,எனும் நியாமான சந்தேகம் பலருக்கும் எழுகிறது.
"விழித்திரு, சமூக நீதி காக்க! தொடர்ந்து கழுகுப்பார்வையுடன் எச்சரிக்கையாய் இரு"எனும் எச்சரிக்கை மணி, திரு.ஸ்டாலின் அவர்களின் செவிகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்க வேண்டும்! அதன் தொடக்கமே எம். ஜி.ஆருக்கான அரசு விழா. எழுபது ஆண்டுகளின் ஏற்றத்தினை தொடருவதும்,குறுக்குப்பாதைக்கு இடம் கொடுக்காமல்,.கூட்டாட்சி நடைமுறை யினை குளறுபடியாக்கும் திட்டங்களை எதிர்த்து,வலுவான குரல் எழுப்புவதுமே, இன்று தமிழகத்தின் தலையாய தேடலும், தேவையுமாகும்!
Note:- The base of this article was the inspiration drawn from the well founded views of Mr. Arunan.{CPM) in a Sun TV programme telecast on 19th Jan 2022.
நல்ல பகுப்பாய்வு.
ReplyDeleteஇன்னொரு கோணத்தில் பகுத்தாய்வுக்கு உட்படுத்தினால்
அண்ணா தி மு க என்ற கட்சி உருவானதும் ஒருவகையில் நன்மையே.
இல்லையேல் தேசீயக் கட்சி ஒன்று எதிர்க் கட்சியாக வந்திருக்க வாய்ப்பு உண்டு.
எம் ஜி ஆர் தட்டுத் தடுமாறி தான் ஆட்சி செய்தார். ஆனால் தி மு க உருவாக்கிய தடத்திலிருந்து புதிய பாதை உருவாக்கும் அமைப்பு அதனிடம் இல்லை. தி மு க செய்ததை மேலும் மெருகேற்றினால் மட்டுமே பதவியில் நீடிக்க இயலும் என்பது தமிழக அரசியல் சூழ்நிலை.
எம் ஜி ஆர் மறைவுக்குப் பின்னும் இந்த கட்சி பதவியில் இருந்தது ஆச்சரியமே.
ஆளுமைத் திறனின்றி, மக்கள் தேவை எது என சரியாக குறிப்பறிய முடியாத கட்சித் தலைமை மேலும் இருபது ஆண்டுகள் பதவியில் இருந்தது.
இதற்கு ஒரு சார்புடைய ஊடகங்கள் பெரும் பங்கு வகித்தது.
திரை முகத்தைக் / முகங்களைக் காட்டி பதவியில் இருந்தது என்பதே உண்மை.
எதிர்காலத்தில் இந்த இரு கட்சிகளுமே தமிழ் நாட்டில் மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை கடைப்பிடிக்கவில்லையெனில் மக்களால் புறக்கணிக்கப்படுவார்கள் என்பது திண்ணம்.
இது ஒரு நல்ல அறிகுறி.
மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் இரு மாநிலங்கள் தமிழ்நாடு, மற்றும் கேரளம்.
அ தி மு காவுக்கு ஒரு சிறந்த, ஊழலற்ற ஆளுமைத் திறன் கொண்ட தலைமை உருவாக வேண்டும்.
இந்த இரண்டு கட்சிகளுமே ஆட்சி புரிவது தமிழ் நாட்டுக்கே சிறப்பு.
அகில இந்தியக் கட்சிகள் மாநிலங்களுக்கு தேவையற்ற ஒன்று.
ஒன்றியத்துக்கும்
சிறப்பான சிந்தனையில் கருவாகி பிரசவித்த தங்களின் கருத்துக்கள்,எனது பதிவிற்கு மெருகூட்டுகின்றன.நன்றி
Delete