தேடித் தேடிப் பாரு,
நல்ல கல்விக் கூடம்;
வேடன் கையில் மானாய்,
வீழும் வாழ்க்கைப் பாடம்!
நாடு உயர்வ தெல்லாம்
நாடும் கல்வியில் தானே!
கள்ளச் சாரா யமும்
கபடச் சாமி யாரும்,
கந்து வட்டி எல்லாம்
மெல்ல மெல்ல ஊறி,
பள்ளம் மேடு ஏறி
பள்ளிக் கூட மாச்சு!
.
மத்திய வாரி யமும்
மாநில வாரி யமும்,
கைய விரிச்சது னால
பையப் பையக் கல்வி,
குத்தகை பேர மாச்சு,
புத்தியும் பொய்யா போச்சு .
காவித் தரகர் எல்லாம்
கல்வி யாளர் ஆக,
போதை வித்த காசும்
போதி மரம் ஆச்சு.
பாவிகள் கையில் சிக்கி,
பள்ளிகள் பாழாப் போச்சு.
காமம் பள்ளி கொள்ள
தீமை தொடர்கதை யாச்சு.
வாழ வைக்கும் கல்வி
வழுக்கும் சறுக்க லாச்சு.
வள்ளல் முகத்திரை கிழிய,
வில்லன் வெளிவர லாச்சு.
நாட்டை ஆள்பவ ரெல்லாம்
நன்மை நாடிடும் நேரம்,
பூட்டிய வகுப்பறைக் குள்ளும்
வெட்ட வெளிச்சம் செல்லும் .
தட்டித் திட்டித் திருத்த,
தகரமும் தங்கம் ஆகும்!
ப.சந்திரசேகரன்.
No comments:
Post a Comment