மக்கள் உன் சுண்டுவிரல்;
மமதை உன் பெருவிரல்.
அடுத்தவர் அழிவிற்கே
ஆள்காட்டும் விரலுனக்கு.
முரட்டுத் திமிர்கொண்டு
மோதும் உன் மோதிரவிரல்!
நடுவிரலை நீ தொலைக்க
விடுமுறையில் நீதியிங்கே!
உன் நாவினில் ஊறிய
வசவுச் சொற்களால்,
மொழியின் புருவம்
சுருங்கிப் போனது .
பிறர் பாதம் பணிகையில்
உன் கைகளின் சாகசம்
அவர் பாதங்களுக்கு
புரியாமல் போனது.
இருட்டுடன் கைகோர்த்து
நீ வெளிச்சத்திற்கு விலைபேச,
இரட்டைத் தாழ்ப்பாளில்
இருளே இரண்டானது.
நீ கையொப்பமிடும்
ஒவ்வொரு கோப்பிலும்,
தோப்புனக்கு உயிலானது.
உன் புன்னகையின் வீச்சு,
கண்ணியத்தின் கதைமுடித்து,
புண்ணியத்தை பொய்யாக்கியது.
உன் கழுத்தில் விழும் மாலைகள்,
உன் எதிரிகளின் கழுத்தினை
நெரித்த கயிற்றில்
தொடுத்தன் வாசம்,
உன் நாசிக்குள் நளினமுடன்
மணம்பரப்பும் மோசம்.
பின்னால் நடந்து
முன்னேறிய உனக்கு,
பின்னால் வருபவர்களை
'பின்பற்றும்' பார்வையுண்டு.
நீ அறுத்தது அரும் நெற்பயிரோ,
அடுத்தவர் தாலிக்கயிறோ,
அவரறிவர் என்பதனால்,
நண்பர்களைக் கண்டாலே,
உனக்கு நிலநடுக்கம்.
நீ நடந்து வந்த பாதையின்
பாதாளப் பரிச்சியம்,
பகைவரின் படுகுழியை
பறித்திருக்கும் நிச்சயம்.
உன் அரசியல் அங்காடி
அழியும்நாள் தேடி,
எகிறும் உன் திமிரை
எரித்திடுவாள் எம்காளி,
எனவேண்டும் பங்காளி.
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment