Friday, March 12, 2021

தேர்தல் தோரணம்

ஏரியும் குளமெல்லாம் ஊராகிப் போனதினால், 

ஊறியதோர் ஊழலால்,உண்டியல் பெருகியது.

உருக்கமாய்ப் பேசியே ஊரளந்து மேய்ப்பவர்கள், 

தெருவுக்குள் சுற்றிவர,தோரணம் தோன்றியது . 

திருவிழாக் கோலமென தேர்தல் களைகட்டியது. 


அடுத்தவர் சொத்துக்களை அடாவடியாய்  மிரட்டி, 

அட்டைபோல் உறிஞ்சி  ஆட்டையைப் போட்டவரும், 

அடுத்தவர் கட்சிளில் அடுத்தடுத்து களமிறங்கி, 

அடுக்கடுக்காய் வலைவீசி ஆள்பிடித்துப் பெறுத்தோறும், 

தொடுத்ததோர் தோரணத்தை,தரிசிக்கும் நேரமிது. 


குருட்டுப் பூனைகளாய்  விட்டத்தில் தாவித்தாவி 

இருட்டொன்றே  பகலிரவாய் பழகிவிட்டோர்  கதைகளும், 

திருட்டுப் பூனைகளாய் தினந்தினம் திசைமாரி, 

திகட்டாமல் பணம்தின்னும் தேசபக்தர் பதாகைகளும்,

பகட்டுடனே தோரணத்தில் பவனிவரும் பருவமிது. 

 

பட்டிதொட்டியெல்லாம் தோரணங்கள் பலப்பலவாம்! 

கட்டிய வேட்டிகளின் கறைபடியா கறைகளெல்லாம், 

கொட்டும் முரசுடனே கோலோச்சும் தோரணமாம். 

விழுந்து வணங்கியோர் பாதங்களை வீழ்த்திவிட்டு, 

எழுந்து நிற்போர்க்கு,ஏற்பளிக்கும் தோரணமாம்.  

.சந்திரசேகரன் .    

No comments:

Post a Comment