Wednesday, September 23, 2020

நன்மையின் அதிர்வுகள்

ஓடிடும் கால்களை இலக்குகள் உந்திட,

மூடிய கதவினில் முட்டுவ தேனோ?

கோடிக் கனவினில் குளித்திடும் மானுடம்,

ஓடையின் நீரென ஓடுதல் உணர்வாம்!.

 

எறும்புகள் ஊர்ந்து,ஏற்றம் அடைந்தி

ஏணியைத் தேடி அலைவது மில்லை. 

கேணியில் நீரென கிடப்பது மில்லை.

திறம்பட தேர்ந்து,துளிர்ப்பதே துணிவாம்! 

 

குறும்பினில் குதித்திடும் குழந்தைகள் கூட்டம்  

கோணிகள் கிழிந்திட கொட்டிடும் கனிகளாம்!

ஆணியை அமர்த்திடும் பசுமரம் போன்று, 

அறம்பல ஈர்த்தலே,அரும்பிடும் நன்மையாம்!


மாடிகள் காண்பது,தரைத்த  பலமெனின்,  

கூடிடும் பலமெலாம் கோர்த்த கரங்களாய்,

நாடிடும் நன்மைகள் நாடியில் துடித்திட, 

மூடிய கதவெலாம் முந்தித் திறக்குமாம்! 

ப.சந்திரசேகரன் .   

No comments:

Post a Comment