Monday, September 7, 2020

வாரிசு விதைகள்

     ஆதார் எனும் அடையாள அட்டை உடைய,உண்மையிலேயே சாதாரண மனிதர்கள்  பெரும்பாலோர்க்கும்,வாரிசு விதைகள் வசந்தத்தின் விளைச்சலுக் கான பொன் தூவல்களே;ஆனால்,செல்வம் செழித்தவர்க்கும்,அரசியல் மற்றும் திரைத்துறையைச் சார்ந்தவர்க்கும்,வாரிசு விதைகள் வசந்தமோ,அல்லது புயலோ என்பது, சூழ்நிலைக் கேற்ற சுழற்சியே .

   மாறாக,வாரிசே இல்லாதவர்க்கு, வாரிசுகளை முன்னிலைப் படுத்தும் நிர்பந்தமோ அல்லது வாரிசை முன்னிலைப் படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டோ, எழுவதற்கு வாய்ப்பில்லை.இதில் உண்மை நிலை என்னவெனில்,என்னதான் முன்னிலைப் படுத்தினாலும், அவரவர்களுடைய அதிஷ்டத்தையும் திறமையையும் அனுசரித்தே, எந்த ஒரு வாரிசும்,அவர் சம்பந்தப்பட்ட துறையில் முன்னேற முடியும் என்பதே, காலம் காட்டும் கணக்காகும். 

     உதாரணத்திற்கு,திரைப்படைத்துறையிலும் இசைத்துறையில் புகழ் பெற்ற பலருக்கும் வாரிசுகள் இருந்தாலும்,எல்லோராலும் அவர்களின் பெற்றோர் எட்டிய புகழ் எனும் ஆலமரத்தின் நிழலை,ஓரளவுக்கேனும் நெருங்கவோ, அல்லது  அவர்களின் வெற்றிப்படிகளில் ஒன்றிரண்டிலாவது கால்பதிக்கவோ,முடிவதில்லை. நடிகர் திலகத்தின் உச்சத்தில் பாதியைக்கூட, பிரபுவால் நெருங்க முடிந்ததா என்பது அவர் தன்னைத் தானே பலமுறை கேட்டிருக்கக் கூடிய கேள்வியாக இருந்திருக்கும். பிள்ளைகளை நடிகர்களாக்க, பல்வேறு இயக்குனர்களும் முயன்று பார்க்க,  திரு.எஸ்.ஏ.சந்திரசேகரனின் மைந்தர் மட்டுமே வெற்றிக்கொடி கட்ட முடிந்தது. 

   திரைப்படத்துறையைக் காட்டிலும் அரசியலில் வாரிசுப் புயல்,சற்று தீவிரமாகவே வீசக்கூடும்.வாரிசு அரசியல் எனும் கருத்தை முன்னிறுத்தி இதுவரை  இந்திய, மற்றும் தமிழக அரசியலில், நேருவின் குடும்பத்தையும் கலைஞரின் குடும்பத்தையும் மட்டுமே மைய்யமாக வைத்து,ஏராளமான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.நேருவின் காலத்தி லேயே,கொஞ்சம் கொஞ்சமாக, நிதானமாக, இந்திராகாந்தி அம்மையாரின் செல்வாக்கு  உயர்த்தப்பட்டதும்,  உயர்ந்ததும்,நாடறிந்த ஒன்றே! 

   ஆனால் அதே காலகட்டத்தில்,தமிழகத்தில் பிரசித்திபெற்ற அரசியல் தலைவர் களான திரு.காமராசர்,திருமணமாகாதவர் என்பதாலும்,அறிஞர் அண்ணாவுக்கு  நேரடி வாரிசு இல்லாததாலும்,அவர்களுக்கு வாரிசு பிரச்சனை எழவில்லை.அப்படியே வாரிசு இருந்திருந்தாலும்,நேரு அவர்கள் செய்தது போல்,திரு.காமராசரும், அறிஞர் அண்ணாவும் செய்திருப்பார்களா என்பது, ஆய்வுக்குரிய நிலையே! 

   பின்னர் நாம் சந்தித்த,தேசிய அளவில் மக்கள் சக்தி பெற்ற,முன்னாள் பிரதமர் திரு.வாஜ்பாய்க்கும்,இந்நாள் பிரதமர் திரு.மோடி அவர்களுக்கும்,தமிழகத்தில் முன்னாள் முதல்வர்களா  திரு.எம்.ஜி.ஆர்,மற்றும் செல்வி ஜெயலலிதா ஆகியோர்க்கும் வாரிசு இல்லாத நிலையில்,அவர்கள்மீது வாரிசு சார்ந்த குற்றச்சாட்டுகள்,அரசியியலில் எழுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அனால் தமிழகத்தில், கலைஞர் குடும்பத்தின் வாரிசு  அரசியலைக்  குறிவைக்கும்  குற்றச்சாட்டுகள், வளர்பிறை விமர்சங்காளாகவே,அவ்வப்போது விஸ்வரூபம் எடுக்கின்றன. 

   அரசியலோ,திரைத்துறையோ,அல்லது வேறு எந்த துறையாக இருந்தாலும்,வாரிசு என்பது வெறும் அறிமுக அடையாள முத்திரையே தவிர,அது காக்காய் உட்கார,  பனம்பழம் விழுந்த கதையே. 

"கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்;
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்;
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்;
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்"

   என்று ஒரு பாட்டில் கூறியதுபோல, வாரிசாக இருந்தாலும்,அவர்கள் சார்ந்த துறையில் எதிர்க்காற்றோடு போராடி, தடைக்கற்கள் அனைத்தையும் கடந்து தனக்கென ஓரு அடையாளத்தை உருவாக்க இயலாவிடின்,கால நதி ஓட்டத்தில் கரைந்து போவர் என்பது,மறுக்க முடியா உண்மையாகும்.சிறந்த நடிகனாகவோ, அல்லது தலைவனாகவோ ஆகும் தகுதி,அந்தந்த மனிதரைப் பொறுத்ததே!அறிமுகங்கள் என்றென்றும் அக்கினிபரிட்சைக்கு உட்பட்டவையே. 

    நேருவின் கம்பபீரத் தலைமை, இந்திராகாந்தியின் அரசியல் அறிமுகத் திற்கு பிள்ளையார் சுழி போட்டாலும், இந்திரா காந்தியின் திறமையே,அவரை தனக் கென்று தனியொரு பாதை அமைத்து,அதனை அவரது கட்சியைச் சேர்ந்த மற்றவரும் பின்பற்றும் வழித்தடமாய் மாற்றியது.பின்னர் அவரது அகால மரணத்தைத் தொடர்ந்து,அவரது மகன் திரு.ராஜிவ் காந்தி ஒரு அரசியல் விபத்தாக உருவெடுத்து அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் ஒரு பரிதாப மரண விபத்து அவரது உயிரையும்  பறிக்க,அவர் அரசியலுக்கு வராமலேயே இருந்திருக்கலாமே என்று நம்மில் பலரும் மனமுருகி வருந்தியிருப்போம்.திடீர் பிரதமரானாலும்  ராஜிவ் காந்தியின்  தலைமையின் கீழ்,அவர் சார்ந்த கட்சியும் இந்தியத் திருநாடும்,சீரும் செல்வாக்கும் பெற்றிருந்தன என்பதே,அவரின் தலைமையின் திறமைக்குச் சான்றாகும்.   

    கலைஞருக்கு பிள்ளைகள் நிறைய இருந்தபோதிலும்,இளம்பருவம் முதல் அவரது அரசியல் கரம் பற்றி'மிசா'போன்ற கொடிய காலகட்டங்களில் சிறைவாசம் உள்ளடக்கிய எண்ணற்ற இன்னல்களை எதிர்த்து நின்று போராடி,அரசியலில் தானே தனக் கென்று ஒரு வலுவான இடத்தை ஏற்படுத்திக்கொண்டவர் திரு.ஸ்டாலின். கலைஞ ரின் அறிமுகம் இருந்தாலும், ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சி,முழுக்க முழுக்க அவரது உழைப்பின்  வெளிப்பாடா கவே பலரும் கருதுகின்றனர்.

   எனவே வாய்ப்புகள் அமைவதற்கும் அவ்வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்திக் கொள்வதற்கும் இடையே,நிறையவே இடைவெளி உண்டு;அந்த இடைவெளியை உரிய அளவில் நிரப்புவது,சம்பந்தப்பட்ட வாரிசுகளின் பொறுப்பே!அரசியல் மற்றும் கலைத்துறை வாரிசுகளைப் பொறுத்த மட்டில்,மக்கள் சக்தியையும்,ரசிகர் செல்வாக்கினையும், தங்களது உழைப் பினாலும்,திறமையாலும்,உயர்திக்கொண் டால் மட்டுமே,நின்று, நிலைத்து,புகழ்பெற முடியும்.பெரிய கார்பொரேட் நிறுவனங் களில்  கூட,வாரிசுகள் போராடித்தான் தலைமையை தக்கவைத்துக்கொள்ள முடிகிறது. எனவே'வாரிசு அரசியல்'என்ற கூச்சலில்,அர்த்தமிருப்பதாகத் தெரிய வில்லை.

  அரசியலில் மேலும் சுவையான வாரிசுக் கதைகளும் உண்டு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள்,வெவ்வேறு அரசியல் கட்சிகளில் கொடிநட்டு,ஏதேனும் ஒரு வாரிசு,ஏதேனும் ஒரு ஆளும் கட்சியில், எப்போதும்  கோலோச்சும் வண்ணம், குடும்பத்தில் அனைவரையும் அரசியலால் அரவணைத்துக் கொள்வதுண்டு. 

    இன்றைக்கு இந்தியாவில் எந்த மாநிலத்தில் வாரிசு அரசியல் இல்லை?தன்  பிள்ளைகளையோ அல்லது உடன்பிறப்பு களையோ  அமைச்சராக்கிப் பார்க்கா விட்டாலும் குறைந்தது ஒரு எம்.எல்.ஏ ஆகவோ அல்லது எம.பி.ஆகவோ பார்க்க வேண்டும் என்று நினைக்காத அரசியல் வாதிகள் இந்தியாவில் மிகக்குறைவே.  அண்ணாவின் பிள்ளைகளாக இல்லா விட்டாலும்,'அண்ணாவின் வாரிசு'என்று ஒரு காலத்தில் தி.மு.க வில் பலரும் தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொண்ட துண்டு.இந்த அடிப்படையி லேயே,பின்னர் செல்வி. ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின்  வாரிசு ஆனார். அடுத்த தேர்தலில் அம்மாவின் வாரிசு யார் என்பதற்கு,கடும் போட்டி நிலவப்போகிறது.

    ஆந்திராவில் தனது  தந்தை திரு.ராஜசேகர ரெட்டியின் இடத்தை,தனது உழைப் பினால் தக்கவைத்துக்கொண்டார் ஜெகன்.தெலுங்கானாவில் ஒரு குடும்பமே அரசியலிலும்,அரசாங்கத்திலும் இருக்கிறது.எனவே,'வாரிசு அரசியல்' சார்ந்த  குற்றச்சாட்டுகளும், குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளுக்கு மட்டும் பொருந்தும் வகையில் பாரபட்சத்துடன்  வைக்கும்  விமர்சனங்களும்,யதார்த்த நடைமுறை களுக்கும்,நடுநிலைப் பார்வைகளுக்கும், அப்பாற்பட்டவைகளே!

    நம் பாரத தேசத்தின் மக்கள் செலவாக்கு நிரம்பப் பெற்ற பிரதமர்களில்,பண்டிட் ஜவாஹர்லால் நேருவும்,இந்திராகாந்தி அம்மையாரும், திரு.ராஜீவ் காந்தியும் திரு. வாஜ்பாய் அவர்களும்,இன்றைய பிரதமர் திரு மோடி அவர்களும்,முன்னிலை வகிப்பர் என்பதை,யாரும் மறுத்துக் கூறிவிட முடியாது.இவர்களில் இந்திராகாந்தி அம்மையாரும்,திரு.ராஜிவ் காந்தியும்  மட்டுமே வாரிசாக அரசியலுக்கு வந்தவர் கள்.ஆனால், அவர்கள் வாரிசு அடிப்படை யில் அரசியலுக்கு வந்தாலும்,தேர்தலை சந்தித்து  மக்கள் செல்வாக்கை  அமோகமாக நிரூபித்த பின்னரே,இந்தியத் திரு நாட்டின் முன்னணிப் பிரதமர்கள் பட்டியலில்,அவர்கள் பெயர் இன்றும் நின்று நிலைக்கிறது.

    அதேபோன்று தமிழகத்தில் காமராசர், அறிஞர் அண்ணா போன்ற பெரும் தலைவர்களுக்குப்பிறகு, கலைஞரும் எம்.ஜி.ஆரும்,செல்வி ஜெயலலிதா அவர்களும்,அவரவர்கள் பாணியின் தனிப்பெருமை பெற்று மக்கள் செல்வாக்கை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டார்கள். இவர்களில் கலைஞரும் எம்.ஜி ஆரும், தானாக அரசியலில் அடர்ந்து வளர்ந்த ஆலமரங்கள்;சுயம்பு நிலை கொண்டவர்கள் என்றும் கூறலாம். ஆனால் செல்வி ஜெயலலிதா எம்.ஜி ஆரால் அரசியல் பிரவேசம் செய்யப்பட்டு,எம்.ஜி ஆரின் மறைவுக்குப்பின்னர் தான்தான் அவரது உண்மையான வாரிசு என்பதை, மக்கள் செல்வாக்கு மூலம் பலமுறை நிரூபித்தார்.

   இங்கே குறிப்பிட்ட,அனைத்து தேசிய மற்றும் தமிழக தலைவர்களில், நேருவையும், எம்.ஜி.ஆரையும், மோடி யையும் தவிர,மற்ற அனைவருமே வெற்றி மட்டுமல்லாது, தோல்வியையும்,தைரியம் சற்றும் தாழாது,எதிர்கொண்ட தலைவர் களே!கலைஞர் எந்த ஒரு தேர்தலிலும் தான் தோல்வியை சந்திக்காதவர் என்றாலும், தனது மாபெரும் இயக்கம் நீண்ட காலம் தோல்வி கண்டதை,தனது ஆழ்ந்த அரசியல் அனுபவத்தால் கடந்து, எந்த ஒரு நேரத்திலும்.தளர்ந்துபோகாத, நெஞ்சுரம் மிக்க  தலைவராக விளங்கினார்.

   கலைஞரின் மறைவுக்குப்பிறகு திரு.ஸ்டாலின் கட்சியினை திறம்பட வழிநடத்தி, பெரும் கூட்டணி ஒன்று அமைத்து,பாராளுமன்றத் தேர்தலில் மாபெரும்  வெற்றி கண்டு,தி.மு.க வின் அரசியல் வரலாற்றிற்கு புதிய பக்கங்கள் இணைத்தார். வாரிசு கள்,மக்கள் சக்தியின் சாதகத்தை அனுகூலமாக்குவதே, திறமையான தலைமைக்கு அங்கீகாரம்.  இந்த வகையில்  தி.மு.க வின் வாரிசு அரசியல்,வாரிசு அடையாளத் தைத் தாண்டி,தனிமனித அடையாள முத்திரை  யை பதித்ததற்கான,முதல் அத்தியா யம் எழுதப்பட்டுவிட்டது.

  வாரிசு அரசியலில்,வாரிசுகள் தாங்களாகவே புதிய உச்சம் எட்டுவதே, வாரிசு விதைகள், சொந்தக்காலில் பந்தக்கால் நடும் திருவிழாவாகும்!இன்றைக்கு அரசியலில்,கொள்கைக்  குளறுபடிகள் குவிந்திருக்கும் காலகட்டத்தில்,வாரிசு விமர்சனங்களை வைத்து அரசியல் புரிவது, அக்குளறு படிகளை மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டுமே தவிர,அதனால் வாக்குச் சாவடியில் திடீர் அரசியல் அதிசயங்கள் நிகழப்போவதில்லை.மக்களைப் பொறுத்தவரை ஊழலற்ற நல்லாட்சியினை ஏதேனும் ஒரு அரசியல் கட்சியாவது தருமா என்கிற மாபெரும் கேள்வியைத்தவிர, வாரிசு விமர்சனங்களுக்கும்,மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும்,எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதே,இயல்பு நிலையாகும்.   

ப.சந்திரசேகரன் .   


1 comment:

  1. அரசியலில் மேலும் சுவையான வாரிசுக் கதைகளும் உண்டு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள்,வெவ்வேறு அரசியல் கட்சிகளில் கொடிநட்டு,ஏதேனும் ஒரு வாரிசு,...... குமரி அனந்தன் குடும்பம்....

    ReplyDelete