Tuesday, September 1, 2020

எண்ணங்கள்

அன்பினால் எண்ணங்களை 

அள்ளித் தெளிக்கையில்,

ஆண்டவனுக்கு மலர் மாலைகள் 

அழகழகாய்  தயாராகின்றன. 

ஆசையில் படர்ந்திடும் எண்ணங்கள், 

ஆர்ப்பரித்து ஆட்டக் களமாகின்றன. 

ஆக்கத்தில் அடர்ந்திடும் எண்ணங்கள், 

ஆலைகளை,இல்லங்களை,சாலைகளை, 

அனுபவத்தால் அவதரிக்கின்றன. 

தேக்கத்தில் நிற்கும் எண்ணங்கள், 

கிணற்றுத் தவளைகளாகின்றன.

ஏக்கத்தில் இணைவுறும் எண்ணங்கள், 

இளைத்து ஈமத் தடம் அமைக்கின்றன.  

போட்டியில் புறப்படும் எண்ணங்கள் 

மூட்டியதீயில் முகம் தொலைக்கின்றன! 

கோபத்தில் கொதித்திடும் எண்ணங்கள்,

கோபுரத்தை குப்பை மேடாக்குகின்றன. 

மோப்பத்தில் மேய்ந்திடும் எண்ணங்கள் 

பொய்ச்சந்தையின் பொழுது போக்காகின்றன.

காத்திடும் எண்ணங்களே,காய்த்துக்கனிந்து, 

கருணையின் கரம் பற்றுகின்றன!. 

காலத்தின் மடியில் காப்பியங்களாகி,  

கடவுளுக்கு காணிக்கை ஆகின்றன!. 

ப.சந்திரசேகரன் . 

No comments:

Post a Comment