Tuesday, December 17, 2019

குடியுரிமை

விடியும் பொழுதில் 
வெளிச்சம் வேரூன்றும். 
பொழுது சாய்கையில், 
இருள் வெளிச்சத்தின் 
விழியகற்றி வேரறுக்கும். 
மீண்டும் மறுநாள் 
வெளிச்சம் வெகுண்டெழுந்து,
குடியுரிமை கொண்டாடும். 
வெளிச்சம் ஒரு வெள்ளாடு. 
வேடங்கள் அதற்கில்லை;
வாய்மையே வழிபாடு. 

மண்ணுக்கு நிறமுண்டு; 
மாறிடும் நிறத்திலும், 
மாற்றான்தாய் குணமில்லை. 
இருளை ஈன்றெடுத்து 
இரவு பாடிடுமாம்
நிறங்களின் இரங்கட்பா. 
மண்ணுக்கு மதமில்லை 
மார்தட்டும் மொழியில்லை. 
சாயும் அனைத்தையும் 
தாங்குமே யன்றி, 
வீசி எறிவதில்லை. 

உயிர்வாழ் இனங்களுக்கு, 
நிலமே உலகு; 
உலகே நிலம். 
பிறப்புக்கும் இறப்புக்கும் 
இடையே காண்பதெல்லாம், 
இனம்சார்ந்த இறுமாப்பு. 
கடந்து செல்லும் 
மாய வலைகளில், 
இடமிங்கே வலமாகி, 
வலியோரின் வன்புலத்தில், 
குலம்பெயர்க்க வழங்கிடுமாம் 
பிரித்தாளும் குடியுரிமை! 
ப.சந்திரசேகரன் 

2 comments:

  1. ................பிறப்புக்கும் இறப்புக்கும்
    இடையே காண்பதெல்லாம்,
    இனம்சார்ந்த இறுமாப்பு...................
    'குடியுரிமையின் மொத்தக் கருத்தும் இதற்குள்ளே...
    மிக நன்றாக இருக்கிறது ஸார். வாழ்த்த வயதல்லை வணங்குகிறேன்...தினம் ஒன்றாவது....இதுபோல்....

    ReplyDelete