Monday, September 9, 2019

திருப்பங்கள்

நீரைக் கடந்து,நெருப்பில் வீழவோ; 
நெருப்பை மிதித்து,நீரில் மூழ்கவோ!
விருப்பங்கள் மனதின் மணற் கயிறுகள்;
திரித்திடும் வேளையில்,தவறிடும் இலக்குகள்.

கற்றதோர் கணக்குகள் கூட்டிக் கழித்து, 

காற்றிலா உடலாய்க் கால்நீட்டிக் கிடக்கயில் , 
நெற்றிக் காசும் நிஜங்களின் திருப்பமே! 
சற்றும் எதிர்ப்படா,சறுக்கலே திருப்பமாம். 

பரட்டையர் தலையில் படர்ந்திடும் பேன்களை, 

விரட்டுதல் எளிதோ,வீண்செயல் வலிதோ? 
புரட்டும் பார்வையில்,விருப்பம் என்பது, 
திருப்பம் காணும் திடுக்கிடும் கதையே!

வெற்றியே தோல்வியின் திருப்பமாய் ஆவது,  
வற்றிய மண்ணிற்கு வளம்தரும் நதியாம் ! 
தொற்றிடும் நோயென தொடரும் தோல்வியில்,
உற்றநல் தோழன்,உதவிடும் மவுனமாம். 

வருமுன் காப்பதே அறிவெனச் சொல்வர்; 
இருமுனைக் கத்தியாய் எதிர்ப்படும் நிகழ்வினில், 
தெருமுனைத் தாண்டிடக் கண்டிடும் திருப்பம், 
உருவகம் போலொரு ஊழ்வினைக் கதையே! 


                                                             ப.சந்திரசேகரன். 

1 comment:

  1. .".............தொடரும் தோல்வியில்,
    உற்றநல் தோழன்,உதவிடும் மவுனமாம்..." Wonderful.

    ReplyDelete