Friday, September 13, 2019

எழுத்துப்பிழைகள்

'துறவி' என்பதில்
முதலெழுத்து மாற
'பிறவி'ப் பெருங்கடல்
பேரலை கண்டது;
அலைதொடும் 'கரை'யினில்
அழிந்ததோர் எழுத்து
களங்கம் சேர்த்து,
'கறை'யென் றானது.
க'ள'ங்கம் தாங்கிய
விழிகள் ரண்டும்
இடையெழுத் தகற்றி
க'ல'ங்கித் தவிப்பதன்,
காரணம் புரிந்தது.
'புரிந்த'தோர் சொல்லை
பிழையொன்று தாக்கிட 
'பிரிந்த'தோர் என்பதில் 
உயிரது பிரிந்தது.
பிரிவிலும் துறவிலும்
பொதிந்தநல் பொருளில்,
பிழைகளை வாழ்வின்
வழிகளாய் வார்த்திட ,
தலைக்கனம் என்னும்
தலைக்கேறிய பிழையும்,
தனிநபர் நடப்பின்
இலக்கணம் வகுத்தது. 
'எ'ழுத்'து'ப்பிழைகள் 
இருபிழை கண்டிட, 
'ப'ழுத்'த'ப் பிழைகள், 
பக்குவ ஆற்றின் 
படித்துறை ஆனது. 
                     ப.சந்திரசேகரன். 

3 comments: