Monday, September 16, 2019

தேய்மானம்

  "கழுதை தேஞ்சு கட்டெறும்பானமாதிரின்னு"ஒரு பழமொழி  சொல்லுவாங்க. முன்னெல்லாம், எட்டாம் கிளாஸ் படிச்சாலே எலிமெண்டரி ஸ்கூல்ல வாத்தி யார் வேல கெடைக்கும். இப்ப எம். ஏ படிச்சுட்டும் சிலபேரு,எடுபிடி வேல பாக்கவேண்டி ஆயிடுது.
    முன்னெல்லாம் பசங்கள பெஞ்சு மேல ஏத்தலாம்; பெரம்பால அடிக்கலாம்;முட்டிபோட சொல்லலாம். 
பெத்தவங்களே வந்து "என் பிள்ள படிக்கலன்னா முட்டிக்கு முட்டி தட்டுங்க சார்"னு சொல்லுவாங்க.  இப்பெல்லாம் லேசா திட்டினாலே,வாத்தியாரோட வேல காலி. 
    அப்போ  கல்யாணம்னாலே,தாலி கட்டறத பாக்க றதுதான்.இப்ப,வரவேற்பில தலையைக்காட்டி, மொய்க்கவர குடுத்துட்டு,வயிறார சாப்பிட்டு, தாம்பூலம் வாங்கிக்கிட்டா,தாலிகட்டுறத பார்த்ததா அர்த்தம்.
    அப்பெல்லாம் சொந்தகாரங்க,இல்லாட்டி ப்ரண்ட்ஸ் வீடுகளுக்குப் போனா,லோட்டாவிலே டீயோ காப்பி யோ வந்துடும்.இன்னிக்கு'டீ போடட்டுமான்னு'கேக்க றதுக்குள்ளாரயே'இப்பதான் சாப்பிட்டு வந்தேன்னு' பொய் முந்திடும். 
    இங்கிலீஷ் தெரியலேன்னாலும் எல்லாருக்கும் தாய்மொழி பேசவும் எழுதவும் தெரிஞ்சிருந்தது அன்னிக்கு.ஆனா இன்னிக்கு,முகத்தில முழி இருக்கிற அளவுக்கு,நெனப்புல மொழியில்லேங் கறதுதான் வாஸ்தவம். 
   அன்னிக்கு அரசு வேலைன்னாலே பென்க்ஷன் உறுதி. இப்ப எல்லாருக்கும் டென்க்ஷன் மட்டுந்தான்  மிஞ்சும்.
   முன்னெல்லாம் பத்து பைசாவுக்கு,ட்ரவுசர்பை  நெறய வறுகடலை;இப்ப பத்து ரூபாய் குடுத்தாலும் பாக்கெட்,பாதிகூட நெறயல. 
    அப்போ  பேங்குல'டெல்லர்' கவுண்டர் இருக்கும்; 'லெட்ஜ்ர்'இருக்கும்.கையால எழுதினாலும், கடகடன்னு வேல முடிஞ்சிடும்.இப்ப எதுக்கெடுத் தாலும் 'சிஸ்டெம்' வேல செய்யலேன்னு சட்டுன்னு பதில் வரும்
    முன்னெல்லாம் பேசறதுக்குன்னே நண்பர்கள் கூடுவாங்க.எப்ப கூடலாம்னு பேசறதிலேயே பாதி பொழுது போயிடுது இப்போ. 
    அன்னிக்கு வானொலி வார ஞாயிறு ஒலிச் சித்திரத்துக்கும்,தொலைக் காட்சியில ஒளியும் ஒலியுமுக்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காத்துக்கிடப்போம். இப்பெல்லாம் சானெல்கள் நெறய ஆகி,சீரியல்கள் சரவெடியாகி,எப்பப்பாத் தாலும் பொம்பளெங்களும் ஆம்பளெங்களும் கத்தறதும்,மூக்க சிந்தறதும்,தொலைக்காட்சியைக்  கண்டாலே  தொட நடுங்குது.
    தியேட்டர்ல சினிமா டிக்கட்டுக்கு மல்லுகட்டுன காலம்போய் இன்னைக்கு பெரிய திரையையும் சின்ன திரையையும் கடந்து,பென் டிரைவ்லையும் கைபேசியிலையும் நுழைஞ்சு,சினிமாவோட சிறப்பே சிறகொடிஞ்ச பறவையாட்டம் ஆயிடுச்சு.
    காமராசர்ன்னு ஒருத்தர்,வேட்டி சட்டையோட,நாடு முழுக்க சுத்தி சேவ பண்ணினாரு.மகாத்மா காந்தி யோ,சட்டையே போடாம சுத்தி,சுத்தி,சேவையில சரித்திரம் படைச்சாரு! இப்பெல்லாம்,பேண்டும் கோட்டும் மாட்டி கிட்டு,உலகம் சுத்தி,அவிங்க அவிங்க தேவையை முடிச்சுக்கிறாங்க. 
   முன்னெல்லாம் அப்பான்னாலே புள்ளெங்களுக்கு ஒரு பயம் இருக்கும்.இப்ப அந்த பயமெல்லாம் அப்பாவுக்குத்தான்.புருஷனுக்கு வெத்தல மடிச்சு குடுத்த காலம்போய்,பொண்டாட்டிக்கு மத்தளமான காலமா போச்சுன்னு நெனெக்கிற அளவுக்கு,காலம் மாறிப்போச்சு.காரியங்களும் தேஞ்சுபோச்சு.
    அவ்வளவு ஏன்?ஈமச் சடங்குகள் கூட எளச்சு போய், இன்னிக்கு செத்தா இன்னிக்கே பால்ங்கிற மாதிரி யும்,பதினாரச் சுருக்கி மூனுலேயே முடிக்கிற மாதிரி யும்,ஆகிப்போச்சு. ஹூம்!நகைக்கு மட்டுமா 
தேய்மானம்?எல்லாத்துக்கும் தான். 
                                                                  ப.சந்திரசேகரன். 

2 comments: