Saturday, December 23, 2017

சொல் தோழா

திருதிருவென விழிக்காதே!
இங்கே தமிழுக்கும் தமிழ் மண்ணின் வளர்ச்சிக்கும்,
பெரும் பங்கு வகித்தவர்க்கு  பெயர் தமிழினத் துரோகி;
உரைத் தூக்கி உலையில் போட்டவர்களுக்கு,
ஊர்ப்பணத்தில்  பணத்தில் இலவசங்கள் அள்ளிக் கொடுத்து,
ஊரின் வளர்ச்சியை  
கிடப்பில் போட்டவர்களுக்கு பெயர், தியாகி.
ஒரு சிலரின் ஊழல் கதைகளுக்குப் பின்னே,
ஊர் வளர்ச்சி இருந்தது;
ஆனால் வேறு பலரின் ஊழல் கதைகள்,
அவர்களை மட்டுமே, 
உயிர் பிரியும்வரை ஊராளச் செய்தது.   
வாரிசு இல்லாதவர்கள்,
மற்றவரின் வாரிசு அரசியல் பற்றி 
அனல் பறக்கப் பேசுவர்.
வாரிசு உள்ள வேறு சிலர்,
தன் வாரிசு வலம் வரும் நாளுக்கு ஏங்கி,
வலுவாக வேரூன்றிய,வேறு வாரிசு இயக்கங்களை ஏசுவர்.
தடம் புரண்டு திகைக்காதே!
இங்கே நடக்கும் அக்கிரமங்கள் அனைத்திற்கும் 
நீயே மூலகாரணம்!
உன்னையும் உன் வறுமையையும், பேராசையையும்,
உன் வாக்குச் சீட்டுக்கொண்டு விலைபேசும் வரையில்,
அதற்கு நீ விலைபோகும் வரையில்,
இங்கே எதுவுமே மாறப்போவதில்லை.
தமிழினத் துரோகியை,
உன் மனக்கண்ணாடியில் பார்!
அங்கே நீ தெரிவாய்! நீ மட்டுமே தெரிவாய்!  
                                                                                     ப.சந்திரசேகரன் .   

No comments:

Post a Comment