ரயில்கள் அத்துமீறி
தடம் புரண்டன.
ஆனால் சட்டமெனும்,
'சாக்கு'மூட்டை சரக்குவண்டி
சம்பிரதாயம் பல கடந்து
தண்டவாளம் தாண்ட,
புரட்டுச் சிக்னல்கள்
புதுத்தடங்கள் படைத்தன.
சதித்திட்டங்கள் வகுத்தன.
அரசியல் புரிபவருக்கு
ஆதிகேசவன் மூளையுண்டு.
ஆட்டிப் படைக்கும்
ஆலகால விஷத்தில்
ஆகாதவன் சிக்கிக்கொள்வான்.
நஞ்சுண்ட மூர்த்தியிடம்
நல்லவராய் நடிப்போர்க்கு,
நளினமாய்த் தப்பிக்க,
நாலுதிசை பாதையுண்டு.
"பாலும் தெளிதேனும்
பாகும் பருப்பும்,
நாலும் சேர்ந்துணக்கு
நான்தருவேன் நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும்தா"
எனப்பாடிய மூதாட்டிக்குரலில்
மூழ்கிய முதலோனே,
சூதாட்டக் களம்காணும்
சூழ்ச்சிச் சதுரங்கம்,
சட்டத்தின் பாதைதனை
சித்துவழித் தடமாக்கி,
கிட்டியவன் கோழையெனின்
கட்டி அணைத்திடவும்,
முரட்டுக் காளையெனில்
மூக்கணாங் கயிறிட்டு
கட்டி இழுத்திடவும்,
வட்டமிட்டு வட்டமிட்டு
வெட்டி விளயாடிடுமாம்!.
கொம்பில் குறைகொண்ட
தும்பிக்கை நாயகனே
நீரிலுன்னைக் கரைத்தாலும்
காரியத்தின் கதவுக்கு
உன்மதியே திறவுகோல்.
சட்டத்தின் வண்டியினை
சரி தடத்தில் இழுத்துவா!.
நீதியறைக் கதவுகளை
சூதழித்துத் திறந்திடுவாய்.
ப.சந்திரசேகரன்.
விரைந்து திறந்திடும் நீதியறைக் கதவுகளே நீதியின் வெளிச்சம் காட்டும். அதே கதவுகள், தாமதமாய் திறந்திட அநீதியின் இருட்டே மிஞ்சியிருக்கும்.
ReplyDeleteசூதழித்துத் திறந்திடுவாய்