எள்முளைத்த இடமெல்லாம்
எருக்கஞ்செடி முளைக்கிறது.
சொல் முளைக்கும் வேளையிலே,
சொல்லோடு முள் முளைக்கிறது.
அக்கறை இல்லாதவரின்
கொக்கறிப்பு குடைச்சலில்,
நிக்கிற இடமெல்லாம்
நெருஞ்சி ஆகிறது.
சத்தம்போட்டு உரைத்தாலும்
சத்தியத்தின் ஓசைக்கு
சங்கே மிஞ்சுகிறது.
சாரை சாரையாய்
பொய்க்கால் குதிரைகள்,
ஊரைச் சுற்றிவந்து
உண்மைச் சவாரிகள்.
எட்டுப் போடச்சொன்னால்
ஏட்டிக்குப் போட்டிபேசும்
எட்டுக்கால் பூச்சிகள்.
இடித்துப்பேசும் இடதுசாரியும்
வழுக்கிப்பேசும் வலதுசாரியும்
படித்துப்படித் துரைத்தாலும்
பாசாங்கு எதிலென
கேட்போர்க்கே கேளிக்கை.
உள்ளுறங்கிய மிருகங்கள்
உக்கிரமாய் உலாவர,
தள்ளுமுள்ளு காட்சியிலும்
தில்லுமுல்லே தீவிரம்.
எலிப்புளுக்கை நிறைந்திருக்க,
எள்ளுக்கே தட்டுப்பாடு.
எள்முளைத்த இடமெல்லாம்
கள்ளிச்செடி கழனியாச்சு.
ப.சந்திரசேகரன்.
உள்ளுறங்கிய மிருகங்கள்
ReplyDeleteஉக்கிரமாய் உலாவர, உள் மூச்சும், வெளி மூச்சும், புயல் போல ஆயாச்சு...