வருடங்களின் வரப்பினுள்,
மாதங்களின் மிதப்புகள்.
மாதங்களின் மடையினுள்,
நாட்களின் நடவுகள்.
நாட்களின் நரம்பினுள்,
நிமிடங்களின் முறுக்குகள்.
நிமிடங்கள் நிமிர்ந்திட
நாழிகையின் நடைபயணம்.
காலத்தின் காதோரம்
காரியங்கள் கதைசொல்ல,
காட்சிகள் பொருத்துவதே
வாழ்க்கையின் விளைச்சல்கள்.
மகசூலின் பெருமிதங்கள்
மனக்குதிரில் நிரம்பிடவே,
அகச்சுகத்தை அளந்திடுமாம்
அணுஅணுவாய் அரும்பொழுது.
பொழுதுகள் புண்ணியமோ
பொதிசுமக்கும் பாதகமோ;
எழுந்திடும் வேளையில்
எண்ணத்தில் பலமிருந்தால்,
நாழிகைகள் நாள்குவிக்க,
மாதங்கள் பன்னிரெண்டும்
ஆண்டின் அறுவடையை,
களஞ்சியத்தில் பெறுக்கிடுமே!
காலத்தின் கோலங்கள்
கணக்குடன் வரைவதற்கே.
வரைவினில் காலமது
உரைத்திடும் உண்மைகள்
சரிந்திடாச் சக்கரத்தின்
சந்திபப்பு நிகழ்வுகளாய்,
புரிந்திடும் மனதிற்கு
புதையலாய்க் கிடைத்திடுமாம்!
ப.சந்திரசேகரன்.
No comments:
Post a Comment