வாழ்க்கைச் சம்பவங்கள் புதினங்களாகவோ திரைப் படங்களாகவோ பிரசவிக்கப்படுகையில்,சமூக அக்கறையும், மனிதநேயமும்,உணர்வலை களும் கொண்டோர் மத்தியில்,பெரும் தாக்கத்தை ஏற்படுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு தாக்கத்தை பல்வேறு பார்வையாளர்கள் மத்தியிலே தோற்றுவித்த திரைப் படமே, சமீபத்தில் திரையரங்கத்திற்கு வெளியே வெளியாகி,மனதில் நிஜங்களின் வலியை ஏற்படுத்திய 'ஜெய் பீம்'.
நடந்தேறிய நிகழ்வுகளை மைய்யக்கருவாகக் கொண்டு, நீதிமன்ற காட்சிகளை பிரதானமாக்கி,ஒரு நீண்ட நெடிய சமூகப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான ஆரம்பப்புள்ளி யினை இத்திரைப்படம் அழுத்தமாக வைத்ததாகக் கொள்ளலாம்.'ஜெய் பீம்'திரைப்படத்தின் இன்னுமொரு அழகான செய்தி,இதில் பழங்குடியினரின் பிரச்னைக்காகப் போராடும் வழக்கறிஞரின் பெயர்.
ஆம்! சந்துரு எனும் அந்த வழக்கறிஞரின் பெயர்,சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதியரசராக பதவி வகித்து ஓய்வுபெற்ற திரு.கே.சந்துரு அவர்களுக்குச் சொந்தமாகும். திரு.கே.சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருக்கையில், இதேபோன்றொரு வழக்கிற்காக நிஜ வாழ்க்கையில் வாதாடி,பழங்குடியினரின் நியாயத்திற்காகப் போராடினார் என்பது செய்தியாகக் கேட்கப்பட்டதாகும்.
மேலும் இன்றைய New Indian Express நாளிதழில், 'ஜெய் பீம்' திரைப் படத்தைப் பற்றி அந்நாளிதழின் திரு.C.P.பாலசுப்ரமணியம் அவர்களுக் கும் நீதியரசர் திரு K.சந்துரு அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த ஒரு நேர்க்காணலை படிக்க நேர்ந்தது.சமூக நீதி சார்ந்த உண்மைச் சம்பவத் திற்கும்,சமூக நீதிக்கென மல்லுக்கட்டும் ஒரு திரைப்படத்திற்கும் இடையே இழையோடும் சத்தியப் பின்னலை,அந்த நேர்காணல் கோடிட்டுக்காட்டு கிறது.
நிஜ வாழ்க்கையில் மிகவும் நேர்மையான வழக்கறிஞராக பலராலும் அறியப்பட்ட நீதியரசர் திரு. K.சந்துருவின் சமூகப்பார்வை 'ஜெய் பீம்' திரைப் படத்தை நிஜத்துக்கு நெருக்கமாக்கியது.'ஜெய் பீம்' திரைப் படத்தைப் பற்றிய நீதியரசர் திரு கே சந்துருவின் முக்கியமான கருத்துக்கள் சில:-
1}'ஜெய் பீம்'திரைப்படம் உருவாக்க தொடங்குவதற்கு முன்னரே படத்தின் தயாரிப்பாளர்கள்,இருளர் அமைப்பிற்கு ரூபாய் ஒருகோடியை நன் கொடையாக வழங்கியுள்ளனர்.
2} திரைப்படம் வெளியானதும்,தமிழக அரசின் சார்பில் முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் இருளர் சமூகத்திற்காக பூஞ்சேரியில் நலத் திட்டங்களை வழங்கியதும், கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடந் திருப்பது காட்சியும் விளைவும் என்ற கோர்வையாக காணப்படுகிறது.
3}'ஜெய் பீம்' திரைப்படத்திற்குப் பிறகு வெளியில் நின்ற சமூகம் உள்ளுக்குள் வந்துவிட்டதாக உணரப்படுகிறது.
4}'ஜெய் பீம்'திரைப்படம் தன் மனதை வெகுவாக பாதித்ததாக குறிப்பிட்டு, இருளர் சமூகத்திற்கான முதல் நிகழ்ச்சிநிரல், அவர்கள் இருப்பது அறியப்படுதலே என்று குறிப்பிட்டி ருந்தார் திரு.K.சந்துரு.
5}தேசிய அளவில் நீதித்துறை சந்திக்கும் நம்பகத்தன்மை பிரச்னையை 'ஜெய் பீம்' திரைப்படம் எழுப்புகிறதா என்ற கேள்விக்கு, நீதியரசர் திரு.K.சந்துரு பதிலளிக்கையில், சமூக ஊடககங்கள் நீதித் துறையைப் பற்றி போலி நம்பிக்கையை இத்திரைப்படம் உருவாக்குகிறது என்று கூறும் கருத்தை ஏற்கமுடியாது என்றும்,தாகத்தில் இருப்பவருக்கு முதலில் ஒரு டம்பளர் தண்ணீர் வழங்க வேண்டுமேயல்லாது 'உங்களுக்கு நிரந்தர தண்ணீர் வழங்கும் திட்டம் இருக்கிறது'என்றும் கூறுவதல்ல, என்று குறிப்பிட்டிருந்தார்.
6}திரைப்படத்தில் செங்கனியின் பிரச்சனைக்காக ஒரு இடது சாரி கட்சி குரல்கொடுப்பதாக காட்டப்படுகிறதே, அப்படியானால் இதர கட்சிகள் கீழ்த்தட்டு மக்களின் பிரச்சனைகளில் தங்களை இணைத்துக் கொள்வ தில்லையா என்ற கேள்விக்கு,இடது சாரி கட்சிகள் அதிக அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதால் அவர்கள் நம் பார்வைக்கு முதலில் புலப்படுகின்றனர்.பிரதான கட்சிகளும் இதுபோன்ற பிரச் சனைகளில் தலையிடுவதுண்டு. சரியான ஆய்வின் அடிப்படையி லேயே இதுகுறித்து முடிவு செய்ய இயலும் என்று கூறியிருந்தார்.
7}துன்புறுத்தல் வழக்குகளில் காவல் துறையினர் தண்டிக்கப்படுவது அரிதாக உள்ளதே என்பதற்கு,திரு K. சந்துரு அளித்த பதில் தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் நான்காம் பிரிவின்படி குற்றத்திற்கு துணை போகும் காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், குற்றவழக்கு களை பதிவுசெய்யும் நிலையில் காவல் துறையினர் இருப்பதால் குற்றம்புரியும் காவலர் தண்டிக்கப் படுவது நிகழ்வதில்லை. காவல் துறரையினருக்கு எதிராக வழக்கு தொடர,இந்திய தண்டனைச் சட்டத்தில் குற்றப்பிரிவு இல்லை. எனவே,இது போன்ற துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறையினருக்கு எதிராக வழக்குதொடர்வது விதிவிலக்கே, என்று பதிலளித்திருந்தார்.
7} தாழ்த்தப்பட்டோரையும் பழங்குடியினரையும்,காவல்துறையினர் துன் புறுத்துவதற்கு எதிரான தீர்வுதான் என்ன என்ற கேள்விக்கு, ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி களை கண்காணிப்பதற்கு ரகசிய ஆண்டறிக்கை உள்ளது என்றும் அதில் ஆறாவது கேள்வியாக, தாழ்த்தப் பட்டோர் பழங்குடியினர் பற்றி,அவர்கள் நிலைப்பாடு என்ன என்று ஒரு கேள்வியின் அடிப்படை யில்,குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக புள்ளி விவரங்கள் இருப்பின், அவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப் படுவதாகவும் ஆனால் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர் களுக்கு,இந்த விதி பொருந்தாது என்றும் இருந்தது,திரு கே.சந்துரு வின் பதில்.
இக்கருத்தினைத் தொடர்ந்து, வகுப்புப் பிரிவினைகளுக்குட்பட்ட சமூகத்தில்,நீதியும் வகுக்குப்புப் பிரிவினைக்குட்படுகிறது என்றும்,அதற்கு உதாரணமாக, இருசக்கர வாகனங்களைக் காட்டிலும் நான்கு சக்கர வாகனங்களில், போக்குவரத்து குற்றங்களை புரிந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்று, ஒரு அழகான உள்குத்தையும் வைத்திருந்தார்.
8}முன்விசாரணை அடிப்படையில் காவல்நிலையத்தில் வைத்து விசாரிப் பதற்கு,கீழ் நீதிமன்றங்கள் சர்வசாதாரணமாக அனுமதி அளிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், இதுகுறித்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் இருப்பதாகவும் அதனை கீழ்நீதிமன்ற நீதிபதிகள் சிலர் தெரிந்து கொள்ளாமலோ அல்லது சொந்த காரணங்களுக்காகவோ கண்டு கொள்வதில்லை என்றும், சாத்தான் குள வழக்கை சுட்டிக்காட்டி அது குறித்து தலைமை நீதிபதிக்கு தான் எழுதிய கடிதத்திற்கு,பதில் பெறப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
9}பழங்குடியினரை குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கு தற்போதும் வாய்வழியாக இளம் காவல்துறை அதிகாரிகளுக்கு விதைக்கப்படு கிறதே என்பதற்கு,திரு K.சந்துரு அவர்கள், ஹைதராபாத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி களுக்கு இது குறித்து சரியாக உணர்த்தப்படுவதாகவும், ஆனால் காவலர் களின் நிலை என்ன என்றும்,மறு கேள்வி எழுப்பியிருந் தார்.காவலர்கள் பெரும்பாலும் பழங் குடியினரை அடித்து உதைத்துத்தான் காவல் நிலை யத்திற்கே கொண்டு வருகின்றனர் என்றும்,கல்வி, வேலை வாய்ப்பு,உறை விடம்,வாக்குரிமை போன்ற திட்டமிடுதல் மூலம் மட்டுமே, பழங்குடியினர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இயலும் என்று பதிலளித்திருந்தார்.
10}இறுதியாக,மனித உரிமை மீறல் பிரச்சனைகள் குறித்த வழக்குகளை எடுத்துவாதாட பல வழக்கறிஞர்கள் ஏன் முன்வருவதில்லை என்ற கேள்விக்கு, மாவட்ட,மாநில அளவில் தனி நபர் அமைப்புகள் ஏற்படுத்தப் பட்டு,அவைகளுக்கு முறையாக நிதி வழங்கப்பட்டு,அதன்மூலம் அநியாய மாக பாதிக்கப்படுவோர்க்கு நீதி பெற்றுத் தரமுடியும் என்று தெளிவாக கூறியிருந்தார்.முடிவாக மிக அழுத்த மாக,'ஜெய் பீம்' திரைப்படம் ஒரு வழக்கறிஞரின் சாகசங்களை பறைசாற்றாது,மேற்சொன்ன அமைப்பு களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகவும் கூறி, நேர்காணலை முடித்திருந்தார்.
நிஜம் திரைக்கதையாகி,ஒரு நேர்மையான நீதியரசரின் கருத்துக் களையும் அங்கீகாரத்தையும் பெறுகையில்,அத்திரைப்படம் தனது சமூகப்பார்வையில் முழுவெற்றி பெற்றதாகக் கொண்டாடலாம்!
ப.சந்திரசேகரன்.