Monday, November 9, 2020

என் கேள்விக்கென்ன பதில்?

    "ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை"என்றார்,                  எம்.ஜி. ஆரின்'ஆயிரத்தில் ஒருவன்'திரைப்படத்தில்,கவிஞர் வாலி.

    மனிதன் என்றும்,தனக்குச் சாதகமா,கேள்விகள் மட்டுமே கேட்கக்கூடியவன்.      "கடவுளே உனக்கு கண் இல்லையா?"என்து,எப்போதும் கண்கெட்ட  பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் மனிதன் கேட்கும் கேள்வியாகும்

   இப்படித்தான்இயக்குனர் சிகரத்தின்'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தில்"கேள்வி யின் நாயகனே,என் கேள்விக்கு பதில் ஏதய்யா?"எனும் சாமர்த்தியமான கேள்வி யினை கவியரசு கண்ணதாசன்,வாணி ஜெயராமின் வேதனைக்குரலில்,எம்.எஸ். வி.யின் இணையிலா இசையில் ஒலிக்கச் செய்தார்.

   இதுபோன்று'அவன் பித்தனா'திரைப்படத்தில் ஆர் பார்த்தசாரதியின்  இசையில்  "இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்;அவன் இருந்தால் உலகத் திலே,எங்கே வாழ்கிறான்?'எனும் ஆதங்கம் நிறைந்த ஆத்திரக் கேள்வி பி.சுசீலா மற்றும் டி.எம்.எஸ் குரலில் ஒலித்தது. இப்பாடலை புனைந்தவரும் கவியரசே. 

     பொதுவாகவே மனிதன்,தன் பலவீனங்களை மறைப்பதற்காகவே, இதுபோன்ற கேள்விகளை இறைவனிடம்கூட,சற்றும் சளைக்காமல் கேட்பதுண்டு. பரமசிவன் கழுத்தேறிய பாம்பு கருடனைப்பார்த்து கேட்பதுபோல்,ஆணவம் தலைக்கேறிய மனிதன்,ஆண்டவனையே தனது குறைகளுக்கு பலிக்கெடா ஆக்குவதற்கோ, அல்லது தனது தவறுகளுக்கு மற்றவர்களை சுட்டிக்காட்டுவதற்கோ,தயங்குவதே இல்லை.

   தன் பெற்றோரைக் கேட்கவேண்டிய"நான் ஏன் பிறந்தேன்?"{எம். ஜி.ஆரின்'நான் ஏன் பிறந்தேன்'திரைப்படத்தில்,கவிஞர் வாலி எழுதியது }எனும் கேள்வியை  ஒருவர் தன்னைத் தானே கேட்டுக்கொள்வதும்,அல்லது தன் பிள்ளையின் பிறப்பிற் குக் காரணமான ஒரு தந்தையே,தன் பிள்ளையைப் பார்த்து,"ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?"என்று கேட்பதும் {'பாகப் பிரிவினை' திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் எழுதியது}வித்தியாசமான,விதண்டாவாதமான கேள்விகளே! 

   ஆனால் இதற்குச் சற்று மாறாக"நானே நானா?யாரோதானா?"என்று ஒரு பெண் தன்னைத் தானே கேட்பதும் { ஸ்ரீதரின் 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' திரைப் படத்தில் வாலி எழுதியது}அல்லது,"நான் யார்? நான் யார்?நான் யார்?நாலும் தெரிந்தவர் யார் யார்?"என்று ஒரு ஆண் தானும் குழம்பி,மற்றவரையும் குழப்பு வதும்,{குடியிருந்த கோயில் திரைப்படத்தில் கவிஞர் புலமைப்பித்தன் எழுதியது}மனித மனம் ஆனந்தத்தில் திளைக்கும்,அல்லது அல்லலுறும் வேளைகளில், சந்திக்கும் குழப்பங்களின்  வெளிப்பாடாகவே,நாம் உணரக்கூடும். 

    மேற்கண்ட ஐந்து திரைப்படங்களில்'நான் ஏன் பிறந்தேன் திரைப்படத்திற்கு சங்கர் கணேஷும் 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்'திரைப் படத்திற்கு இசை ஞானி இளையராஜாவும் இசையமைக்க,'குடியிருந்த கோயில்' திரைப் படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதனும்,இதர இரண்டு படங்களுக்கு விஸ்வநாதன் இராமமூர்த்தி யும் இசையமைத்திருந்தனர். 

   நடைமுறை வாழ்விலும் சரி,வெண்திரையிலும் சரி,"என் கேள்விக் கென்ன பதில்?"என்று கேட்போரே அதிகம்.காரணம் விடையறிந்தோர்,தேவையற்ற கேள்வி களை கேட்தில்லை.மாறாக,விடையறியாதவர்களும் குழம்பிய குளத்தில் மீன் பிடிப்போரும் ,கேள்விகளில் நூதன களம் காண்பர். 

   'திருவிளையாடல்' திரைப்படத்தில் ஏழைக் கவிஞன் தருமி கூறுவது போல 'எனக்கு கேள்வி கேட்கமட்டும்தான் தெரியும்'என்று நினைப்பவர்களே இங்கு ஏராளம்.கேள்விக்கு பதில் அறிந்தவன் ஞானி.மற்றவர்களை பகடைக் காய்களாகக் கருதி,கேள்விக் கணைகளால் துளைத்து,தனக்குத் தேவையான விடைகளை தேடித் திரிபவன் சகுனி.இதுபோன்ற ஞானிகளுக்கும் சகுனிகளுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் பலரும்,திருவிழாவில் காணாமல் போய்,திருதிருவென விழிக்கும்  அப்பாவிகளைப் போன்றோரே.

ப.சந்திரசேகரன் .   

1 comment:

  1. கேள்விக்கு பதில் அறிந்தவன் ஞானி.மற்றவர்களை பகடைக் காய்களாகக் கருதி,கேள்விக் கணைகளால் துளைத்து,தனக்குத் தேவையான விடைகளை தேடித் திரிபவன் சகுனி...... அருமையான வரிகள். அதில் தான் யார் என்று அறிய முயன்று அறிந்து கொள்பவன் பரம ஞானி.

    ReplyDelete