Thursday, June 18, 2020

கூப்பிய கோபுரம்

கூப்பிடும் குரலினை தெய்வம் கேட்டிட 
கூப்பிய கரங்களில் கோபுரம் காணலாம்; 
தோப்புக் கரணமும் தலைதாழ் சரணமும்,
காப்பவன் கருணை கறந்திடும் கலையாம்.

தோப்பினில் மரங்கள் தனித்தனி ரகமாம்;
வேப்பிலை தாங்கிடும் மரத்தின் நிழலில்,
தீப்பொறி இன்றியே தீபம் காண்பராம்!
பூப்பது எல்லாம்,மாயியவள் கணக்கே!

கோப்பியம் பேணலும்,குலநெறி வகுத்தலும், 
வார்ப்புகள் வரைந்த வலிகளை அகற்றலும், 
நாப்பிழை தவிர்த்து நாளினை உயர்த்லும்,
மூப்பினை நோயில்,முடக்கா இறைமையாம். 

சாப்பிடும் உணவிலும் சாத்திரம் அடங்கிட, 
மோப்பமும் மோகமும்,மூதறிவு முறிக்குமாம்.
காப்புகள் கைகளில் பலமெனச் சேர்கையில்,
கூப்பிய கைகளில்,குழைந்திடும் கடவுளாம். 
பி.கு:-
கோப்பியம்-தனிமை;அமைதி;ரகசியம்.
ப.சந்திரசேகரன்

1 comment:

  1. "காப்பவன் கருணை கறந்திடும் கலை"...
    பட்டியல் இடப்பட்ட ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு பக்கம் நம் கருத்தில் பதிந்த பரிணாமங்களை படைக்கலாம்.. அத்துணை பொருட் செறிவு..
    கூப்பிய கைகளில்,குழைந்திடும் கடவுளாம்..
    கூப்பிய கைகளில்குழைந்திடும் கடவுளாம் என்றார் என் ஆசான். படித்திடும் மனதும் குழைந்தது என்பது தான் அனுபவ பூர்வமான உண்மை. இறை யருளால் வளர்க தமிழ் அவர் திருக்கரங்களில். பாரிவள்ளலாய் நமக்கெல்லாம் பகிர்ந்தளித்திட

    ReplyDelete