Monday, January 15, 2018

படியாக் குதிரை

குழந்தைப் பருவத்தின்,
குதூகலம் நினைவில்லை;
இளமையில் நானொன்றும், 
இதிகாசம் காணவில்லை.
வாலிப வருடங்கள்,
நட்பின் சாலையில்,
வசந்த விருட்சமாய்,  
வளங்கொழித்து வழிநெடுக ,
வாஞ்சையுடன் நின்றன.
பத்து பத்து ஆண்டுகளாய், 
படியாக் குதிரைகளாய், 
பாழுங் காலமிங்கே 
பறந்து போனதினால்,  
இந்திய வரைபடமே,
இளைத்துக் குன்றியதாய்,
மருட்சியில்  மனப்பிரமை.
இளைப்பாறும் முதுமையில்,
இழந்ததை நினைத்து
முதுமையை சுமப்பதோ?
இருப்பதைச் சுவைத்து
இனிப்புற வாழ்வதோ?
ஆழ்மனதில் ஆணியடித்து 
ஆணவத்தில்  தொங்கவிட, 
காலமொன்றும் காலண்டரில்லை.
பகல்போன்று பவுர்ணமியாய், 
காரிருள் அமாவாசையாய், 
காலம்தன் கையேட்டை, 
வந்து வந்து வாசிப்பது,
மாற்றத்தின் மறுபதிப்போ?
அன்றின் வாசலைக்கடந்து,
வெறுமுடலாய் வெளியேறி,
ஒளியெனும்  தீப்பிழம்பில்,
இருட்டெனும் புதைகுழியில்,
உருமாறும் உலகியலின்,
ஒருநூலின் முடிவுரையோ?
காலத்தின் முகத்திலென்றும்,
காதோர நரையில்லை;
ஞாலத்தை அறியுமுன்னே,
நானிங்கே நரையுற்றேன்.
காலமெனும் பருந்திற்கு
கால்தூசு இரையானேன். 
                                 ப.சந்திரசேகரன் .  

1 comment:

  1. Excellent explanation for "time and tide wait for none", Sir.

    ReplyDelete