Monday, April 3, 2017

சொல் தோழா!



கட்சிகளும் காட்சிகளும் .
====================
ஒரேத் தலைமையெனும்
ஓர் மரத்து நிழலில் 'ஒழுக்கமுடன்' ஓய்வெடுத்து,
கருவெனுந் தலைமை, காலமாய் ஆனவுடன்,
திருவிழாக் கூட்டத்தில் தொலைந்த பிள்ளைகள்போல்,
தெருவெல்லாம் கூடி கைக்கலப்பில் மோதி,
உருவம் தனதென்று தினம் ஒலிக்கும் கட்சிகள்.
உள்குத்து பலவால்   உருக்குலைந்த கட்சிகள்!  
ஊழல் கதைகளால்  ஊனமுற்ற கட்சிகள்!
கல்லெனச் சொல்லெறிந்து கரையேறாக் கட்சிகள்!
வில்லெறியும் ராமனென்று  வீம்பு போற்றும் கட்சிகள்!
பல்லாண்டு போராடி பாரதம் விடுவித்து,
எல்லாம் நாங்களே என்று இறுமாப்பு பாடி, 
செல்லாக் காசான பழஞ் சிறப்புக்  கட்சிகள்!
எத்தனைக்  கொடிகள் எத்தனைக் கோடிகள்!
ஏதேனும் ஒன்றிங்கே சத்தியம் போற்றிடின்,
மோதும் அறப்போர்கள் முடிவுக்கு வருமன்றோ!
சூதுகளால் செங்கோல் பற்றும் நிலைமாறி,
நீதி வெல்லும் நாள் என்றோ சொல் தோழா!
                                                          .சந்திரசேகரன்  
  

No comments:

Post a Comment