நீ பிறந்த நாளினிலே,
நினைவுகளை மரமாக்கி,
கடும்வெயில் காலத்தின்,
கருணைநிழ லாக்குகிடுவோம்.
நன்மைகள் பலசெய்தோம்;
நண்பர்கள் வஞ்சித்தர்.
தோல்விகள் புதிதல்ல;
எத்தனை பத்தாண்டுகள்;
எத்தனை சாதனைகள்!
கல்வியும் மருத்துவமும்
கண்களாய்க்கொண்டு,
கனிவுடன் ஆற்றினோம்,
காலநிலைத் தொண்டு.
உன்தமிழின் உயர்வோடு
உதித்திடும் சூரியனால்
ஒவ்வொரு நாளும்,
பதித்திடும் ஏடுகள்,
பறைசாற்றும் வரலாறு!.
"தளராதே உடன்பிறப்பே",
என்றுநீ கூறு.
தெளிவும் தீரமும்,
தேயாது இருக்கும்வரை,
அன்றாடம் உதிக்கும்
ஆதவன் போல்,
வென்றாலும் தோற்றாலும்,
வீழ்வதில்லை விரல்நுனியால்!
சென்றாலும் செல்லாமல்,
நீயிருப்பாய் எம்முடனே!
ஆடைகள் மாறலாம்;
மேடைகள் மாறலாம்.
அணிகள் மாறிடினும்,
பணிகள் தொடருமிங்கே!
தமிழ்த்தாயை தள்ளிவைத்து,
வள்ளுவனின் நிறம்மாற்றும்,
வழிக்குழப்பம் நீங்கிடவே,
மழித்தலையும் நீட்டலையும்,
அழித்திடுவர் அருந்தமிழர்.
ஜூன் மூன்றின் நாட்குறிப்பு,
வானுயரச் செய்திடுமாம்,
வண்ணத்தமிழ் வரலாற்றை!
ப.சந்திரசேகரன்.
.jpg)