Saturday, November 8, 2025

"அக்கறை"

 

"சொல்வதைக்கேள்! 

அவனுடன் பேசாதே. 

அவன் போர் வெறியன். 

நான் அமைதியின் 

ஆன்மாவை நேசிப்பவன். 

சொல்வதைக்கேள்! 

உன் முதுகில் 

வரிகள் விரியாது; 

நானே உத்திரவாதம் .

என்னை கேட்காமல்,

எண்ணை வாங்காதே.

நீ என் நண்பனெனில், 

உன் நண்பர்கள் 

என் நண்பர்களே! 

போருக்குள் புதைந்தவர்கள், 

ஆவிகளாய் எனக்குள் 

ஆதங்கம் அடுக்குகின்றனர்.

காஸாப் போரில் 

நாசமாய்ப் போனவரும்,

உக்ரைனில் சிக்கி 

உயிர் விட்டோரும், 

முக்கி முனகுவதை,

என் மூச்சுக்காற்றில் 

முகர்ந்து பார்! 

அணுவின் குணமறிவேன்; 

அழிக்க நான் நினைத்தால், 

அகிலமே அரண்டுபோகும். 

நான் சொல்வதைக்கேள்!

என் ஆருயிர் நண்பன் நீ. 

உன் ஊர் போரையே 

நிறுத்திய எனக்கு முன்,

அன்றாடம் நான்முழங்கும்

ஆயிரம் உருட்டல்களில்,

உன் உருட்டல் 

உளுத்துப் போகும்.

அக்கறையால் கூறுகிறேன்!

அலப்பறையை அடக்கு.

என்னுடன் வா! 

ஏற்றுமதி இறக்குமதி, 

இயக்குவதே என் மதி. 

சொல்வதை கேள்! 

அதுவே உன் விதி;

உன் நாட்டுக்கு நிம்மதி" .   

ப.சந்திரசேகரன்.

 


  

 

No comments:

Post a Comment