நேற்றும் இன்றும்!
நேற்றும் இன்றும் தொடர்கதை இல்லை;
காற்றும் கண்டது மாசின் தொல்லை.
சுற்றமும் நட்பும் கூடிய திண்ணை,
வற்றிய நதியென நோக்கிடும் விண்ணை.
உற்றதோர் உறவும் உற்றுப் பார்த்திட,
வெற்றுக் காகிதம் விளம்பிடும் கதையே!
கற்ற கல்வியும் காட்டிடும் சான்றிதழ்,
பெற்றது அனைத்தும் பேருக்கு மட்டுமே!
'நேற்றுபோல் இன்று இல்லை' எனுமோர்
மாற்றுப் பாதையில் மறுவிய திரைவரி,
ஆற்றாமை அகற்றி ஆறுதல் மொழிந்து.
தூற்றுமோ,தேற்றுமோ,இன்றைய பொழுதை?
தொற்றிய நோயினை துரத்திய பின்னரும்,
முற்றிய மதநோய் மூர்க்கமாய்த் தாக்கிட,
குற்றத்தின் குதூகலம் கூவிடக் கேட்டோம்!
நேற்றைய நாற்றுகள் நற்பயிர் கூட்டுமோ?
நற்றமிழ் நாவினில் தேனென ஊறிட
பற்றும் பாசமும் மனிதமாய் நிறைந்து,
முற்றத்தில் கூடிநாம் முழுமதி கண்டிட,
மற்றொரு நாளில் நேற்றது தோன்றுமோ?
ப சந்திரசேகரன்.
மற்றொரு நாளில் நேற்றது தோன்றாவிடினும், நாளைய பொழுது நேற்றதைத். தோற்கடிக்கட்டும்!!
ReplyDelete