Wednesday, August 23, 2023

எட்டாக்கனிகள்.

முட்டிடும் கன்றதன்

கிட்டிடும் பாலுக்கு

பசுமடி முடிவோ,

வசமுடன் மடிபற்றும்

கறப்பவன் கரமோ?

'இட்டார் பெரியோர்'

என்பதன் இலக்கணம்,

தட்டிப் பறிப்போர்

தாவி வலம்வர,

கைக்கெட்டும் கனியது

வாய்க்கெட்டா வரவோ,

ஏய்ப்போரின் தரவோ?


குட்டக்குட்டக் குனிதல்,

பணிவின் பாரமோ

வலியின் வதமோ?

வட்டம் சிறிதோ

வான்வரைபெரிதோ

கட்டிய கோட்டைகள்

காட்டிடும் சேட்டைகள்!.

கொட்டிடும் மழையில்

கூரைகள் அழலாம்;

பாறைகள் அழுமோ?

வேறூன்றா மரங்களே

வீழ்ந்திடும் சாறையாய்!


எட்டி உதைக்கையிலும்

எழாமல் உதைப்பராம் 

எட்டாக் கனிகளையும் 

இருந்தே பறிப்போர்.

நட்டவர் நலிந்தனர்

கெட்டவர் பெருத்தனர்.

எட்டாக் கனிகள்

எட்டுத் திசையிலும்

ஏழையின் கவணுக்கு.

கிட்டாப் பாலுக்கு

முட்டிடும் கன்றுகள்

முன்னும்  பின்னும்!.

                  ப.சந்திரசேகரன்






1 comment:

  1. ......"கொட்டிடும் மழையில் கூரைகள் அழலாம்;பாறைகள் அழுமோ? ....." பாறைகளும் அழுத கண்ணீர்தான் கல்லுக்குள் ஈரமோ?

    ReplyDelete