அலறலுக்கு சத்தமுண்டு;
சத்தத்திற்கு அர்த்தமுண்டு.
பஞ்சாங்கம் பார்த்து
அரசாங்கம் நடத்துவோர்க்கு,
இராப் பிச்சைக்காரனின்
ரண ஒலிகேட்காது.
பற்றியெரிவது வயிறோ
பாமரன் உயிரோ?
அதைப்பற்றி அறிவது,
புத்தியோ லத்தியோ?
சத்தியம் துறந்தோர்க்கு
சாத்திரங்கள் துணையாமோ!.
இது துச்சாசனன் காலம்.
பச்சாதாபம் பார்ப்பதில்லை;
ஆடைகள் களைந்திடும்
அரக்கர்கள் மத்தியில்,
அலறிடும் குரல்கள்
பெண்மையோ,தாய்மையோ?
பெரும்பான்மைப் பாய்ச்சலில்,
சிறுபான்மைக் கரும்புகள்,
சிதைந்திடும் அலறலில்!.
அறமறியா அதிகாரம்
அடித்திடும் வெப்பத்தில்,
சுருண்டிடும் உடல்கள்.
நாடாளும் நடைமுறைகள்
கோடாரிக் கொம்பெடுக்க,
கேடாகும் மக்கள்நலம்.
உளறல்கள் பலவாகி
ஊரெரியும் கலவரத்தில்,
உறைந்திடும் அலறல்கள்.
காசிமட்டும் நன்றானால்,
தேசமெலாம் நன்றாமோ?
வந்தேபாரத் வண்டிவர,
நொந்தமக்கள் அலறல்கள்
எட்டுதிசை எட்டிடுமோ?
பட்டவலி பறந்திடுமோ?
ப.சந்திரசேகரன்.
...சிறுபான்மைக் கரும்புகள்,
ReplyDeleteசிதைந்திடும் அலறலில்...( 👌) சிவப்புச் சிதறல்களாய் சீறிப் பாயும் செங்குருதி💅
சிறப்பு சார்.....
ReplyDelete