இனிய பொங்கல் திருநாள் வாழ்த்து.
=====///=========///=========///=====
கல்லெறியும் தூரத்திலே கழனியிங்கு விளைஞ்சிருக்க,
நெல்லறுக்கும் நேரத்திலே,நெற்றிவரை வேர்த்திருக்க,
எல்லையம்மன் அருளாலே எல்லோரும் எணைஞ்சபடி,
சொல்லிவச்ச பொழுதினிலே கதிரறுத்து முடிச்சோமே!.
இல்லையென்று சொல்லாத இனமுள்ள வரையிங்கே,
முல்லைமல்லி மணமெல்லாம் முந்திவரும் வாசலிலே.
வில்லம்புக் குறிபோல புள்ளிவச்ச கோலம் கண்டு,
பல்லெல்லாம் பளிச்சென்று புன்னகைக்கும் நாளிதுவே.
அல்லலுற்ற உழைப்பெல்லாம் ஆனந்தக் களிப்பாகி,
மல்லாந்து படுக்கையிலும் மனமுழுக்க நாட்டியமே!.
தொல்லைகளும் துன்பங்களும் துரத்தியே வந்தாலும்,
வல்லமையாய் நின்றிடுமே வான்கண்ட கரும்பெல்லாம்.
வெல்லத்துடன் வெந்நீரும்,வெப்பமுற்ற பாத்திரத்தில்,
மல்லுக்கட்டி பொங்கிவரும் மணியரிசிப் பொங்கலிங்கே!.
பொல்லாமை,பொறாமை,புதுநெருப்பில் பொசுக்கிவிட்டு,
நல்லவைகள் நிரப்பிடுவோம் நடுநெஞ்சுக் களஞ்சியத்தில்.
ப.சந்திரசேகரன்.
...இல்லை என்று சொல்லாத இனமுள்ள வரை இங்கே முல்லை மல்லி மணம் எல்லாம் முந்தி வரும் வாசலிலே..
ReplyDelete.....இல்லை என்று சொல்லாத இனமுள்ள வரை இங்கே பொங்கலோ பொங்கல் என்று பொங்கி வரும் பேரோசை...
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!!! அய்யா!!!
ReplyDeleteசிறப்பு.. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteஆமாம்...நல்லவை நிரப்பி அல்லாதன பொசுக்குவோம்.🙏
ReplyDelete..