Thursday, September 9, 2021

மரத்தடியோ 'மன'மேடையோ!


 



                                                {வினைதீர்க்கும் விநாயகச்சதுர்த்தி}


அரசமரமோ ஆலமரமோ, 

முட்டுச் சந்தோ, 

முன்வாயில் மூலையோ,  

இருப்பிடம் நீ தேடி அலைவதில்லை! 

"கல்லுப் பிள்ளையார் போல்" 

எனச்சொல்லி கலாய்த்தாலும்

உனக்கொன்றும் வருத்தமில்லை.  

சொல் தவறி பிழைப்போரும்

நல்லவரும் நரியாரும், 

மல்லுக்கட்டும் தோப்புக்கரணம்

எல்லாம் தினம்கண்டு,   

உள்ளுக்குள் நகைத்திடுவாய்!  

எளிமையில்  நீயிருக்க, 

நளினமாய் பலநிறத்தில் 

நாடெல்லாம் உனைப்படைத்து,

நாளொன்றில் கரைத்திடுவர்

ஊர்வலமாய் உனைத்தூக்கி.  

உடைக்கும் செதிர்த்தேங்காய்

ஒவ்வொன்றும் உடைகையிலே, 

உன்செவிக்கு ஓர் இசையே! 

பழமும் கொழுக்கட்டையும் 

படைத்ததால்  உன்தொந்தி.

பெருத்ததென்று நினைப்போர்க்கு,

பெருத்தது அவர்கொழுப்பே!  

சொந்தக்குறை சொல்லி 

சோகத்தில் தொழுதோரின் 

ஊழ்வினைகள் உள்வாங்கி, 

வந்தாரை வாழவைக்கும் 

வளமிகு தமிழகம்போல்,

வாழ்த்திடும்  மனம்கொண்டாய். 

அந்தியிலா அரவணைப்பில்

அழகான கொம்பிரண்டில்  

வந்தவர் உடைத்துவிட்டர்

வலம்வந்து,இடக்கொம்பை! 

மற்றவர் குறையேற்கும்,

மூலப்பொருள் நாயகனே 

மூசிக வாகனனே, 

முழுமனதில் ஏற்றுகிறோம்; 

முந்திக் காத்திடுவாய். 

{*குறிப்பு:- பரமசிவனின் அருள்பெற்ற பரிசான பரசுராமனின் கோடரி, விநாயகர் மீது பாய,தந்தையின் பரிசுதனை தட்டிக்கழிக்க விரும்பாது, தனது இடது கொம்பினை உடைத்துக்கொள்ள தயாரானதால், விநாயகரின்  இடது கொம்பு சற்றே தகர்ந்துபோனது எனும் ரு புராணத் தகவலை மாற்றி எழுதியமைக்கு,அனைவரும் மன்னிக்கவும்*. }

ப.சந்திரசேகரன்.    

2 comments: