திருதிரு விழிகள் திருடனைக் காட்டுமோ?
கருவிழி களவுற,காதல் கூடுமோ?
ஒருவிழி ஒருதிசை,மறுவிழி மறுதிசை,
துருவிடும் விழிகள் துப்புத் துலக்குமோ?
இரவினில் ஒளியைத் தேடிடும் விழிகள்,
விரிவுறும் வேளைகள்,பகலென ஆகுமோ?
அருவியில் குளிக்கும் ஆனந்தப் பரவசம்
தெருவில் கூடிடும் விழிகளில் தோன்றுமோ?
மருவிடாத் தேடல்கள் மாயையில் மிதந்திட,
உருகுதல்,பகிருதல்,உளவுக் கூடலோ?
சுருங்கிய புருவம் சுகமாய் விரிந்திட,
சுரங்கப் புதையலோ,சுறாமீன் பாய்ச்சலோ?
கரும்பின் இனிப்பும்,கடுக்காய் கசப்பும்,
நிரம்பிடும் விழிகளில்,நீந்துதல் முறையோ?
திரும்பிடும் திசையில் தரிசனம் திரண்டிட,
விரும்பிடும் விழிகளின் விரிவுரை பலவாம்.
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment