'இவன் வேற மாதிரி'ன்னு ஒரு தமிழ்த் திரைப்பட தலைப்ப பாத்தவுடன, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிதான! இதுல என்ன,'இவன் வேற மாதிரி'ன்னு ஒரு தலைப்புன்னு தோணிச்சு.'என் புருஷன் குழந்தை மாதிரி'ன்னு தலைப்ப பாத்தப்போ,அய்யய்யோ கொழந்தைன்னா,'புருஷ லட்ச ணம்' காணாம போயிடுமேன்னு தோணிச்சு.
இப்பிடித்தான் கே.பாலச்சந்தர் இயக்கின'அழகன்'கிற படத்தில, மம்மூட்டி வீட்ல வளர்ற அநாதை பிள்ளைங்கள்ல,கண்ணாடி போட்ட ஒரு பொடிப் பையன்,"நாமெல்லா வேற வீட்ல பொறந்திருக் கலாம்டா" ன்னு அடிக்கடி சொல்லுவான். கடைசில அநாதைன்னு தெரிஞ்சதுக் கப்புறமா,"அப்ப நாம வேற எங்கையும் பொறக்கலையா?"ன்னு பரிதாபமா மூஞ்சிய வச்சுகிட்டு சொல்லும்போது ,எனக்கே சங்கடத்தில மனசு வேற மாதிரி ஆயிடுச்சு.
ஒலகத்தில மிஞ்சுறது 'மாதிரி' மட்டுந்தான்.மாதிரி இல்லாம ஒன்னுமே இல்ல! மனுஷங்க ஒவ் வொருத்தரும்,வேற வேற மாதிரி தான்.மனுஷன் கண்டுபிடிச் சதா நெனச்சுக்கிட்டுருக்க தெய்வங் களும்,வேற வேற மாதிரி தான்.காந்தி மாதிரி,இந்திரா காந்தி இல்ல;நேரு மாதிரி,மோடி இல்ல. அதே போல, முருகன்கையில வேலிருக்கு;ஆனா ஏசு இருக்கறது சிலுவை யிலே. உருவமே இல்லாமே வழி படற ஆலயங்களும் இருக்கு.எல்லாமே வேற வேற மாதிரிதானே!கடவுள் ஒன்னுன்னு சொன்னாலும்,இங்க கடவுளும் வேற வேறதான்;அந்த கடவுளை அறிமுகப்படுத்தற மதமும் வேற வேறதான்.
இப்போ கொரோனாவே எடுத்துக்கு வோமே;தொற்று நோயில இதுவும் ஒன்னுனாக்கூட, இது வேற மாதிரி தொற்றாச்சே! அட தடுப்பூசியை பாருங்க. ஒன்னொன்னும் ஒவ்வொரு ரகம்.'கோவிஷீல்ட்டு'க்குப் பதிலா 'கோவாக்சின்'போட்டிருக்கலாமோன்னு நினைக்கிறாப்போல வெளி நாட்டுல மாட்டிக்கிட்ட இந்தியருங்க ''ச்ச நம்ம நாட்டுலேயே இருந்திருந்தா, 'பைசருக்கு'பதிலா'கோவாக்சின்' போட்டிருக்கலாமே''ன்னு தோணும். எல்லாமே வேற வேற மாதிரி நெனப்புதான்.
அதே மாதிரி ஒரு டாக்டர்கிட்ட போய் ஒடம்பு நல்லாயிட்டா,நல்ல வேள நாம வேற டாக்டர்கிட்ட போகலன்னு நெனப்போம். அதுவே வேற பிரச்ச னையில கொண்டுவந்துட்டா, வேற டாக்டர்கிட்ட போயிருக்கலா மோன்னு, நெனக்கிறதும்,வேறமாதிரி யோசிக் கிற நெலமதானே.
பலநேரத்ல, ஏதாச்சும் பேசின பெறகு,அத இப்பிடி சொல்லியிருக்க லாமோன்னு நெனைக்கிறதும்,ஒரு காரியத்தை முடிச்ச பெறகு,அத வேற மாதிரி பண்ணிருக்கலாமோனு தோண்றதும்,சகஜம்.படிப்பு,வேல,கல்யா ணம்,எல்லாத்திலேயும், முடிச்ச பெறகு,இல்ல முடிஞ்ச பெறகு, ஒன்னுக் குப்பதிலா இன்னொன்ன நெனக்கிறது,மனுஷ சலனம்.அட அதெல்லாம் உடுங்க!.கொழந்த பொறந்த ஒடனேயே 'ச்ச பொம்பள பிள்ளையா பொறந்து போச்சே! ஆம்பள பிள்ளையா இருந்திருக் கலாமே'ன்னு நெனெக்கிற அற்ப புத்திகார மனஷன்களும்,வேற வேற மாதிரி தானே.
நானெல்லாம் 'காலேஜ்'ல வேல பாக்கறப்போ 'க்ளாஸ்' முடிஞ்ச பெறகு, நடத்துன பாடத்தை வேற மாதிரி நடத்திருக்கலாமோன்னு தோணின துண்டு.ஆனா பசங்கள கேட்டா ,அவங்க வேற மாதிரி யா கூட நெனச்சிருக் கலாம். எப்பிடிங் கிறீங்களா?"நீ ஏற்கனவே நடத்தி கிழிச்சதே போதும்; இதுல இன்னும் வேற மாதிரி வேறயா?"சோ, அதைப் பத்தியெல்லாம் வேற மாதிரி நெனச்சு பாக்கவே கொல நடுங்குது.ஆனா மத்தவங்க செயல் பாட்ட மாத்திரம் நாம எல்லாரும் வெலாவாரியா அலசி ஆராஞ்சு 'இப்பிடி இருந்திருக்கலாம்; அப்படி இருந்திருக்கலாம்'னு கூவு வோம். பி.ஹெச்.டி பண்றவங்க எத்தனை பேறு,அவங்க 'கைடு'ங்க கிட்ட மாட்டி முழிச்சிருப் பாங்களோ!
எப்பவுமே அடுத்தவங்கள 'வேற மாதிரி இருந்திருக்கலாம்,வேற மாதிரி செஞ்சிருக்கலாம்'னு சொல்றது ஈசிதானே! எவ்வளவோ கஷ்டப்பட்டு ஒரு டைரக்டர் சினிமா படம் எடுப்பார்.விமர்சனம்ங்கிற பேர்ல எவ்வ்ளவு'வேற மாதிரி' பாக்கிறோம். ஒப்பிடறதுக்காக ஒரே மாதிரின்னு சொன்னாலும், வேறு படுத்தறதுக் காக வேறமாதிரி சொன்னாலும், ஒவ்வொரு ஒப்பிடறதும் வேறுபடுத் தறதும்,வேற வேற மாதிரி தானே? ஒவ்வொரு மாதிரியும் வேற வேற மாதிரிங்கிறதுன்னால,'இது வேற மாதிரி' ங்கிறது மட்டுந்தான் நெசம்.
தெச நாலாயிருக்கறதும், தேசங்கள் பலவாயிருக்கறதும்,வேற வேற தானே.அதே போலத்தான் மனுஷனும் வாழ்க்கையும். 'உன்னைப்போல் ஒருவன்''என்னைப் போல் ஒருவன்'னு ஒரு பேச்சுக்கு சொன்னாலும், 'போல'ன்னு இருக்கறதைவிட'வேற'ன்னு இருக்கறது தான்,எல்லா விஷயத் துக்கும் வேரு{root}.அதிலையுங் கூட அது வேறு,'வேரு'எனும் சொல்தான். அது மட்டு மல்ல ஒவ்வொரு வேரும், வேறு வேறுதான்.{'அமரதீபம்' திரைப்பட நகைச்சுவை நடிகர் அமரர் கே. ஏ.தங்கவேலுவுக்கு நன்றி யுடன்!.}
ப.சந்திரசேகரன் .
=============================