திரிசங்கு நிலைத்தந்து
தேர்தல் முடிந்தபின்னே,
அரசமைக்க ஆள் பிடித்தால்,
ஆளுயர மாலையிங்கே!
முரசுகொட்டும் முடிச்சவிர்ப்பில் ,
முழுக்க நனைந்தோர்க்கு,
முக்காடு தேவையில்லை.
தரிசாகக் கிடந்த நிலம்
வேர்வை நீர் தெளித்து
வெள்ளாமை ஆகிவிட,
அரிசியும் ஆமணக்கும்
அளவின்றி குவித்துவைக்க,
வரிசையை இடைமறித்து
வணிகப்பேய் வாரிச் செல்லும்.
பெரிசாய் வளர்ந்தோரே
பேரத்தை வென்றெடுத்து,
அரசியல் புரிவோருக்கு
ஆதார நிதியாவர்.
நெரிசலில் நலிந்தோர்க்கு,
நடுத்தெருவில் நகர்வலமாம்!
சிரசெல்லாம் கொதித்தாலும்
சிதையாகிப் போனாலும்,
கரிசனம் காணாது
காலம் கடந்திடுமே,
உரசிடும் உழுதமண்ணின்,
ஊமைவிழிப் போராட்டம்!
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment