Friday, August 21, 2020

மூக்கணாங் கயிறு.

ஆக்கம் கெட்டிடின்,அனுபவம் கெடுமாம்;
தூக்கம் கெட்டிடின்,தோப்பில்தனி மரமாம்.
நாக்கின் நமைச்சலில் நழுவிடும் சொற்கள்,
தீக்கிரை யாக்குமாம்,தேன்கூட் டுறவை.

பாக்கள் பலவும் புனைவோர் அவையிலும்,
வாக்கினில் பிறழ்வர்,ஒட்டக் கூத்தனாய்.
தாக்கிடும் கொம்புடை,குறும்புக் காளையை,
தேக்கிடும் தடுப்பே,மூக்கணாங் கயிறு.

பூக்களின் நாரென புதுமணம் பரப்பியே 
மூக்கணாங் கயிறது முரண்டுகள் களையுமாம்;  
காக்குமோர் கயிறுன்,காளையின் வீரமும்
ஊக்கமாய் மோதுமாம்,உள்மூச்சு வாங்கியே!

மூக்கணாங் கயிறெனும் திருமணக் கூடலில்,
சீக்கிரம் இழைவது சேவலோ,கோழியோ? 
போக்குகள் மாறிடும் புதுவழிச் சாலையில், 
தூக்கிடும் சுமையெல்லாம்,தூரத்து சுகமோ?
    
                                                      ப.சந்திரசேகரன் . 

No comments:

Post a Comment