Saturday, January 25, 2020

இந்தியக் குடியரசு

{இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்}
                          26/01/2020

விடியாது போராடி, 
விடியலைக் கண்டோரின், 
குடியரசுக் கதையறிவோம்! 
தடிகொண்டு எழுந்தோறும் 
தன்மானம் காத்தோரும், 
தளராது தடைகளைய, 
படைக்கத்த பங்கியர்கள் 
படிந்ததொரு பழங்கதையே, 
குடியரசுக் குலக்கதையாம்! 

குடியுரிமை புதுக்கதைகள் 
புழுதியினைப் பரப்பிடவே, 
குறைகள் பதிவாகிடுமோ,
குடியரசின் குறிப்பேட்டில்? 
படிகள்பல கடந்தவரின்  
படிவங்கள் மாறிடுமின்,
வெடிக்கும் விரிசலில் 
குடியரசுக் கொண்டாட்டம் 
குறுங்கதைகள் படைத்திடும்! 

ஓடியாக் கிளைகளிங்கே 
ஒற்றுமை மரமென்பர்; 
ஒடித்துக் களைகையிலே 
அடிவேரும் அழுதிடுமே! 
மடிப்பிச்சை கேட்பதுபோல் 
மறுவாழ்வு கேட்டிடுவர், 
குடியரசில் புலம்பெயர்ந்தோர்;
அடிவயிற்றைக் கலக்குவதே 
அகதிகள் ஆகும்வழி.

நடுநிலையில் கால்பதித்து, 
நாட்டின்நலம் நாடிடுவோர் 
நாளெல்லாம் வேண்டுவது,
நடிப்பறியா நல்லோரின்,
படிப்பறிந்த பழுத்தோரின்,  
படிப்பறியா பாமரனின், 
துடிப்பறிந்த தோழமையில் , 
கரம்கோர்த்துக் கொண்டாடும், 
குடியரசின் குலக்கதையே.  

கொண்டாடு கொண்டாடு 
குடியரசைக் கொண்டாடு! 
அண்டை அயலாரையும்  
அரவணைத்துக் கொண்டாடு
 ப.சந்திரசேகரன் 

1 comment:

  1. ....கொண்டாடு கொண்டாடு
    குடியரசைக் கொண்டாடு!
    அண்டை அயலாரையும்
    அரவணைத்துக் கொண்டாடு......GOLDEN THOUGHTS ONLY REFLECT SUCH DIAMOND WORDINGS...Pray for the enrichment Sr. Pray for U ..N.Balasubramonia Pillai, 05/107 DUGAR

    ReplyDelete