Tuesday, January 14, 2020

கோலங்கள்

{இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்} 

தாய்வரைந்த கோலம் கருவறையில்;
சேய்தரித்த கோலம் முலைப்பாலில்.
ஓய்வறியா உழைப்பிற்கு வெகுமதியாய்
காய்கனிந்த காட்சியெலாம்  இனிப்பாகி,
பாய்விரித்து பந்திவைக்கும் கோலங்கள்!
நோய்நொடியை புடைத்தெடுத்து வீசிடவே,
வாய்மணக்கும் புன்னகை பூக்களெல்லாம்,
பாய்ந்துவரும் பொங்கல் கோலங்களாய்.

உரசுகின்ற  குடியுரிமைப் புள்ளிகளால்,
அரசியலின் கோலமுண்டு ஆங்காங்கே!
சிரசினிலே சிந்தனைகள் சிறகடிக்க,
வரிசையாய் வண்ணமுறும் கோலங்கள்.
தரிசுநிலம் தானியத்தை தத்தெடுக்க,
முரசுகொட்டி பொங்கிவரும் கோலமிங்கே!
அரிசிமணி ஆனந்தம் பொங்கவைத்து,
விரிசலுக்கு விடைகொடுக்கும் கோலங்கள்.

பதர்களை பகுத்தறிவால் புறக்கணித்து,
பதலமுடன் நெற்குவியல்  சேர்த்துவைக்க,
கதிரவனும்,கதிர்துறந்த கழனிகளும், 
எதிரெதிராய் காட்சிதரும் கோலங்கள்.
பொதுவுடமைக் கோலங்கள் படையெடுக்க,
அதிர்வுகளாய் அரங்கேறும் தைப்பொங்கல்.
முதிர்ந்தமனம் முழுநிலவாய்ப் பொலிவுற்று, 
உதிர்ப்துவே வேளாண்குல  கோலங்கள். 
 குறிப்பு:- பதமுடன்-- கவனமுடன்

ப.சந்திரசேகரன் . 

No comments:

Post a Comment