அரசியல்!அவையில் அதிலுனக்கு அறுபது;
நெரிசலைக் கடந்து நெஞ்சுரம் தரித்து,
விரிசலைப் பேணிய வீணர்கள் தவிர்த்து ,
முரசுகள் ஒலித்திட முச்சங்க மானாய்!
கரிசலும் கழனியும் கணிசமாய்க் கடந்து,
தரிசும் தழைத்திட தடங்கள் வகுத்தாய்!
பெரிசும் சிறுசென படர்ந்த பிரிவுகள்,
சரிசமம் போற்றிட சமத்துவம் சார்ந்தாய்!
அரிசியின் கற்கள் அகற்றுதல் போன்று
உரசிப் பார்த்து உலகியல் அறிந்தாய்.
பரிசெனப் பெரும்உன் பேச்சும் எழுத்தும்
கரிசனம் கொண்ட கலைத்தாய் அருளே!
வரிசை பிறழாது வாழ்த்து பெறுவோர்க்கு,
இருசுடர் ஒளியென இருளகற்றி நிற்பாய்!.
ப.சந்திரசேகரன்.
No comments:
Post a Comment