Wednesday, May 28, 2025

முரண்

  

முரண்,

அரசியலின் அரண்;

தனிமனிதனின் திறன். 

மாற்றிப் பேசுவது

முரணாகிப் போகுமெனில் 

"மாற்றம் ஒன்றே மாறாதது" 

என்பதும் முரண் தானே! 

காதலில்,

விழிகளுடன் வார்த்தைகள் 

மோதி முரண்படும். 

சாதகத்தில், 

பரிகாரம் முரணாகி,

பல்லிளித்து நிற்கும்;

பரிகாரம் பூர்த்திசெய்ய,

விதிவிலக்கு முரணாகும். 

தவறுகளை சரிக்கட்ட 

செயல்களே தவறாகி, 

தவறென்பதே சரியாகும். 

கொன்றால் பாவம் 

தின்றால் போச்செனில், 

தின்றதன் பாவத்தை 

ஒன்பதில் ஒருவாசல், 

ஒருமுறைக்கு பலமுறை, 

கருவறுத்து கழிக்கும்.

தவறுகளின் பிராயச்சித்தம், 

மன்னிப்புக் கோரலோ?

தண்டனை ஏற்றலோ? 

மன்னிப்பும் தண்டனையும் 

முரண்களின் முகவுரையே! 

மனிதரில் இறைவனைக் 

காண்பதெனில், 

இறைவனே மனிதனாமோ? 

கடன்பட்டார் நெஞ்சம் 

கலங்குவது பகற்கனவே! 

முரண்பட்ட வாழ்க்கை 

கிடங்கில் முடங்கி 

முடியாததும் முழுநிசமே! 

அறன்களின் கண்ணாடியில்,

முரண்களும் முகம்காணும்!    

ப.சந்திரசேகரன்.


  

No comments:

Post a Comment