"கிழக்கு வெளுத்ததடி
கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு
கமல முகம் மலர்ந்ததடி"
எனும் 'அவன் பித்தனா'திரைப்பட பாடல் வரிகள் சிலநேரம் என் நினைவுக்கு வருகையில்,இங்கே ஒரு தாமரை கட்சி, உதயசூரியன் கட்சியைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கிறதே என்ற நகைப்புச் சிந்தனையும் கூடவே வரும்.
உதய சூரியனின் வெப்பம் கூடக்கூட,அதன் முகம் கண்டு மலர்ந்த தாமரைக்கு,சங்கடம் கூடுகிறது.இதில் பிரச்சனை,கதிரவனின் வெப்பத்தில் இல்லை; குளம் ஒன்றே பெரி தென நினைக்கும் தாமரை,நீர் மட்டுமே வாழ்க்கையில்லை,நெருப்பும் நிறைந்ததே வாழ்க்கை எனும் மாற்று நிலைப்பாட்டினை ஒப்புக்கொள்ள மறுப்பதே,நாட்டின் பல பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது.
வானம்,காற்று,நீர்,நெருப்பு,அத்தனையும் புவியின் யதார்த்தங்கள்.இதில் நீரில் மலரும் தாமரை,நீர் மட்டுமே பிரதானம்,இதர அனைத்தமே தனக்குக் கீழ் என்று கருதம் பாணியில்,சிலர் தங்களதுசித்தாந்தம் மட்டுமே முதன்மை என்றும்,மற்றவைக்கு இங்கே இடமில்லை என்றும் கெடுவழிக் கொள்கை பரப்புகையில், கண்ணதாசனின் 'கறுப்புப்பணம்'திரைப் படத்தின்,
"இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார்
சிலர்,கிணற்றில் இருந்துகொண்டே உலகளப்பார்"
எனும் ஒப்பற்ற வரிகளில் உண்மையைக் காணமுடிகிறது.
இதுபோன்ற மடமை மன நிலையில் ஊறிப் போனவர்கள்,எதிர் தரப்பு இயக்கத் தின் கொள்கையும் கோட்பாடும்,காலாவதி யானதாக நினைப்பதும் பேசுவதும்,குறுகிய மனப்போக்கல்லாது வேறு என்னவாக இருக்கமுடியும்?.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பு,மொழிவாரி மாநிலங்களின் கூட்டாட்சித் தத்துவத்தில் அடங்கியிருக் கையில்,'ஒரே நாடு,ஒரே கட்சி,ஒரே தேர்தல் ஒரே மொழி,ஒரே மதம்'எனும் முழக்கங் களில்,முதலாவதைத்தவிர மற்ற அனைத்துமே பிரிவினை வாதத்தின் முகக்கவசங்களாகின்றன!முகக்கவசம், நோய்க்கு எதிரானதாக இருக்கவேண்டுமே யன்றி,நோயின் காரணியாக இருக்கக் கூடாது.
கூட்டாட்சி நடைமுறையில் இயங்கும் ஒவ்வொரு மாடலுக்கும்,அந்த மாநிலத்தை ஆள்வதற்கென மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட ஆளும் கட்சியே தனக்கு உகந்த மாடலை உருவாக்குகின்றது.அந்தவகை யில் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசு,பெருமையுடன் உருவாக்கிய மாடலே திராவிட மாடல்.
சுயமரியாதையை யாரிடமும் அடகு வைக்காத,கொள்கையினை மாற்றுக் கொள்கைக்கு விட்டுக்கொடுக்காத, சமத்துவம் பேணலை தார்மீகக் கடமை யாகக் கொண்டுள்ள,ஒரு மாடல் எப்படி காலாவதியாகமுடியும்? திராவிடத்தின் பெயரால் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக தேர்ந்தடுக்கப்பட்ட எவரும், அவர் ஒரு முதல்வராகவோ அல்லது அமைச்சராகவோ இருக்கும் பட்சத்தில், அடிமை சாசனம் எழுதிக்கொடுப்பாரே யானால் அவர்கள் மக்களின் நம்பிக்கை துரோகிகள் ஆகின்றனர்.
அப்படிப்பட்ட இழிச்செயலை பதவிக்காக ஒரு சிலர் முன்பு செய்திருந்தால்,அதனை எல்லோரும் செய்யவேண்டும் என எதிர் பார்ப்பதும்,அதற்கென ரகசியமான சாணக்கிய தந்திரங்களை மேற்கொள்வ தும்,அடிமைச்சங்கிலியின் ஆர்ப்பாட்டமே!எப்பொழுதெல்லாம் ஜனநாயகம் சர்வாதி காரத்தை முன்னிறுத்தி சமத்துவத்திற்கு சவக்குழி தோன்றுகிறதோ,அப்போதெல் லாம் ஜனநாயகம்,தனக்கான சாவு மணி யையும் அடித்துக்கொள்கிறது
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் நாட்டை ஆளும்,திராவிட முன்னைற்றக் கழகத்தின் அரசாளும் நடை முறைகள், சமூக நலனை அட்டவணையாக்கி, நாகரீகமான செயல்பாடுகளால் அதனை சாதனைகளாக்கி,பலரால் பாராட்டும் வண்ணம் பலம் பெற்றிருக்கின்றன. மதவாதமும் சந்தர்பவாதமும் இல்லாத பலரின் கூட்டணிக்குரல்கள் ஒலித்திட, கடந்த ஆட்சியின் சில அழுக்குச்சுவடுகள் அழிக்கப் பட்டு வருகின்றன.
மகளிர் மற்றும் மாணவியர் நலன் பேணல், பள்ளிச்சிறார் காலைச் சிற்றுண்டி,'நான் முதல்வன்'சிந்தனைக் கிளர்ச்சி,மக்களைத் தேடி மருத்துவம்,கல்வி,மற்றும் தொழில் முன்னேற்றம்,கட்டமைப்பு விரிவாக்கம், என்று எல்லாவகையிலும் அமைதியும் பொறுப் புணர்வும் நிரம்பப் பெற்ற அரசாக,திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.எந்த அளவு உச்ச பட்ச உழைப்பை மாநிலத்திற்கு அளிக்க முடியோ அந்த வகையில் மக்கள் குறைகளைத் தேடிச் செல்லும் முதல்வராய் இன்றைய தமிழ் நாட்டு முதல்வர்,கடமை யாற்றிக்கொண்டி ருக்கிறார்.இந்த உண்மை நிலையினை உணராதோர்,இன்று தமிழ் நாட்டில் மிகக் குறைவே.
ஆர்ப்பாட்டமில்லாமல் ஆட்சி நகர்கையில் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசின் முக்கிய தீர்மானங்கள் பலவும், கொள்கைகளால் முரண்பட்ட, அதிகார பலம் மிக்கவர் என்று கருதும் ஒரு சில தனி நபர் களால் கிடப்பில் போடப்பட்டு,மக்களாட்சி நடை முறைகள் பின்னுக்கு தள்ளப்படு கின்றன. இதோடு நில்லாமல்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை மாடல்,காலாவதியாகிவிட்டது என்று கூறுவது,ஆளும் அரசை மட்டுமல்லாது, அந்த அரசை தேர்ந்தெடுத்த மக்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தி, காயப்படுத்துகிறது.
இந்த அறைவேக்காட்டு அறைகூவல்களை திராவிடம் + மாடல் என்று இரண்டாகப் பிரித்து " 'காலாவதி' என்று சொன்னவர், மாடலைத்தான் சொன்னார்;திராவிடத்தை அல்ல"என்று சில வலதுசாரி விமர்சகர்கள் விளக்கம் கூறுவது,மேலும் நகைச்சுவையா கிறது. திராவிடம் இல்லாமல் எங்கிருந்து வந்ததாம் அதன் மாடல்?.இது போன்ற சித்து விளையாட்டுக்கள் வலதுசாரிகளுக்கு மட்டுமே கை வந்த கலை.
அத்துமீறி சீண்டப்படுகையில்,அமைதி கூட பன்மடங்கு சீற்றம் பெற்று,நாட்டின் பன் முகத் தன்மையிலும் கூட்டாட்சி கோட்பாடு களிலும் ஊறிப்போன சமத்துவ,சமதர்ம, சுயமரியாதை ஊற்றுகளை,பேரலைகளாகி, சர்வாதிகார சூழ்ச்சிகளை கரைத்து காலாவதி ஆக்கிவிடும் என்பதே,வரலாறு புகட்டும் பாடம்.
காலம் வென்ற, திராவிடம் எனும் இயக்கம், 'மாடல்'எனும் சொல்லை மட்டுமே இன்று தத்தெடுத்திருக்கிறது.ஆனால் திராவிடம் என்பது ஒரு இனமல்ல. அது மனித சமூகத் தின் சமத்துவ கூட்டமைப்பு.அதற்கு மதமோ சாதியோ இல்லை.அதற்கு ஒட்டு மொத்த மனிதமே,மனித முன்னேற்றமே இலக்கு. இந்த இலக்கிற்கு காலவரையரையில்லை. இந்த இலக்கு ஒருபோதும் காலாவதியாகப் போவதுமில்லை.
ப.சந்திரசேகரன்.