Monday, September 26, 2022

குண்டுகளும் திண்டுகளும்

திண்டுக்குக் காத்திருப்போர்

குண்டுகள் வீசுவர்,

குண்டுச் சட்டிக்குள்

குதிரைகள் ஓட்டிக்கொண்டு.

நெஞ்சின் நச்சுதனை

நெருப்பறியுமோ நீரறியுமோ?

வஞ்சகமே அரசியலின்

வாழ்நாள் கனவென்று,

படிவர்ண நிறம்போற்றி

பகைவளர்க்கும் பதர்முன்னே,

மிஞ்சாத காலமிட்டு

குண்டுகளின் புகையகலும்;

கூன்பிறையின் வெளிச்சத்தில்,

குண்டுகள் வீசியோரை

கண்டிடுவோம் தெளிவாக!.

மண்டிடும் குழப்பங்களின்

மாற்றுவழி அரசியலை,

குண்டுகட்டாய் தூக்கிவந்து

குறிவைத்து கருவறுக்கும்,

நிலமது தமிழகமாம்!.

கண்டிப்பாய் ஆள்வோர்க்கு,

குண்டுகளும் திண்டுகளும்

முண்டங்களின் முகவரியே.

ப.சந்திரசேகரன்.






Thursday, September 22, 2022

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

===============

விளம்பரம் தேடுவோர்க்கு,

விமர்சனங்கள் இலவசம்.

கிளம்பிடும் கருத்துக்கள்

கீரல்களின் பரவசம்.


 'நீதிக்குப்பின் பாசம்'

'பாதிக்குப்பின் மோச'மெனும்

ஒற்றைவரி விமர்சனத்தால்,

தேவரின் படத்திற்கு,

வசூலில் வறட்சியில்லை.


'தாய் மகளுக்குக்கட்டிய தாலி'

'வெட்கக்கேடு'எனும் கேலி,

கக்கத்துக் குழந்தையென

கட்டிக்கொண்ட ரசிகர்களை,

தட்டித் தடுக்கவில்லை.


அக்காலத் திரையரங்கம்,

கீற்றுக் கொட்டகையோ

தகரக் கொட்டகையோ,

நான்குவார ஓட்டத்தில்

நாலுகாசு பார்த்துவிடும்.


சமூகக் கூடமென

தரைடிக்கட் கூட்டத்தின்,

அமோகக் கலெக்ஷனில்

ஆனந்தம் பரப்பியது,

ஆங்காங்கே டாக்கீஸ்கள்.


ஆனாலும் இன்றோ,

ஒருநாள் நிறைந்தாலே

டிஜிட்டல் அதிசியமாய்,

'வெற்றிநடை'போடுதிங்கே,

ரீல்சுற்றா திரைப்படங்கள்.


விமர்சனக் காய்ச்சல்கண்டு

கம்மர்சியல் தோல்வியிலே,

கதிகலங்கி நிற்கிறது 

நிழலுலக நிசமெல்லாம்.

பழியேற்கும் ஊடகங்கள்!


நல்லதைக் கொண்டாடு;

அல்லதை அலசாமல்,

அழுக்கு மொழிபேசாமல்,

அடிநெஞ்சின் அறிவுரையை,

ஆட்கொள்ளல் பண்பாடு.


பலகோடி பணம்போட்டு,

அலைக்கழிக்கும் உழைப்பினிலே

படைத்ததோர் படக்கோட்டை!.

இலகுவாய்த் தகர்ப்பதிலே

நிலைக்குமோ சந்தோஷம்?


குத்துதல் முறையாமோ,

குறைப்பிரசவ விமர்சனமாய்?

கத்துக்குட்டிகள் களமிறங்க,

கறைபடுமோ கருத்தாய்வு?

ப.சந்திரசேகரன்.



.