கண்ணுக்குள் கம்பீரம்,
கதைகளால் வரக்கூடும்;
எண்ணத்தில் கம்பீரம்,
ஏடுகள் விதைக்கக்கூடும்.
நடத்தையின் கம்பீரம்
இடிப்பாரை இனங்கண்டு
இடத்தினை கருத்தாக்க,
எடுத்தஅடி ஏவலாக்கும்.
வல்லான் என்பது,
சொல்லால் வருவதல்ல.
முல்லைக்கு தேரீந்த
வள்ளலும் வல்லானே!
எல்லைச் சாமியென
எதிரிகளை அண்டவிடா,
எவருமிங்கே வல்லானே!
சத்திய வாக்கிற்கு
சாக்கில்லை போக்கில்லை.
கத்தியின் கூர்மையென
புத்தியைக் கொண்டோரும்,
சத்திய வழிநின்று
சாதனை புரிவோரும்,
நித்தமும் விடும்மூச்சில்,
உத்திரமாய் உளம்காக்கும்
கண்ணியமே கம்பீரம்.
கண்ணிமைக்கும் நேரத்தில்
கம்பியிலாச் செய்திகளாய்
கம்பீரம் கரைபுரண்டு,
கனவுகளை நிசமாக்கும்.
அர்ஜுனனின் அருங்குறியே!
அம்பாரிப் பொலிவோடு
ஆளுமையின் கம்பீரம்,
ஆற்றல்களின் ஆவணமே.
வெம்பிடும் மனநிலையை
வீழ்த்துவதே கம்பீரம்!
நம்பிக்கை கப்பலினை,
நடுக்கடலில் நாட்டிடும்
நங்கூரம்,கம்பீரம்!
No comments:
Post a Comment