{இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!}
'நான் விடைபெறுகிறேன்' என்றது,
இரண்டாயிரத்து இருபத்து ஒன்று.
'போ'என்று விரட்டினாலும்
'போகாதே' என்று தடுத்தாலும்,
போகத்தான் போகிறது.
சங்கடங்கள் சரித்திரம் ஆனதால்.
செல்லுவதில் எல்லோர்க்கும் சந்தோஷமே.
சிந்திய கண்ணீரும் சிதறிய உயிர்களும்,
முந்திச்செல்லும் கயிறு முறுக்கிட
முடிந்தது ஓராண்டின் ஆயுளும்!
வரப்போவதில்லை,இருபத்து இரண்டு ,
வரச்சொல்ல நாம் யார்?
'வேண்டாம்' என்று சொன்னாலும்
வரத்தான் போகிறது அடுத்த வண்டியாய்.
எல்லா பயணங்களையும்,எல்லா வேளையிலும்
நினைத்தபடி நாம் அமைக்க முடிவதில்லை.
"எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும்"
என்று தருமியைப்போல் நாம் இருந்தாலும்,
கேள்விக்கான விடைகள் என்றும் விடுகதையே!.
வருகிறது இன்னுமொரு ஆண்டு.
வரவேற்போம் வாசலில் நின்று,
வாய்நிறைய புன்னகையை வென்று .
நடந்ததும் நடக்க இருப்பதும்,நாள் கணக்கே!.
கடந்ததை கருத்தில் கொண்டு
கனிவுடன் காத்திருப்போம்.
விடைகள் விசாலமாய் விந்தைகள் புரியட்டும்!
முகமும் கவசமும் நிறங்கள் தாண்டி,
அகத்தின் அழகை நிசமென காட்டட்டும்.
சுகத்தின் காற்றை,பகிர்ந்து சுவாசிப்போம்.
ப.சந்திரசேகரன்.