Friday, June 2, 2017

முத்தமிழும் மணக்கும் நாள். ஜூன் மூன்று




திருக்குவளை தரிசித்து திருக்குறளை தெளிவித்து,
வரைக்குள்ளே  வரிகளும் வார்த்தைகளும் உள்ளடக்கி , 
உரியதோர் மொழியாற்றல், உணர்வோடு வகுத்தவனே! 
பருக்கையே பதமென்பர், பெரும்பானைச்  சோற்றுக்கு;
இருக்கையில் நீ அமர்ந்து பேசத் தொடங்கிவிட்டால்,
ஒரு போகம் பலவாகி ஊருக்கே விருந்தாகும்.

ஒருதிசையில் என்றென்றும் உதித்திடும் சூரியனை,
கருமேகம் வளைத்தாலும் கதிர்வீச்சில் கலைவதுபோல்,
உருமாறி பலருன்னை பழிபோட்டு பேசிடினும்,
இருமடங்காய் உன்படைப்பு, உன்புகழை நீடுயர்த்தும்.

அருந்தவமாய் தமிழுக்கு நீசெய்த தொண்டனைத்தும்,
புரிந்தவர்க்கே புலப்படுமாம், பதிப்புரிமைப் பலனாக ;
சரிந்துவரும் செந்தமிழைச் சீர்படுத்தும் சிந்தனையை,
விரைந்திங்கே விதைத்திடுவோம்,நீபிறந்த நாள்பரிசாய்!
                                                                                       ப.சந்திரசேகரன்.        

No comments:

Post a Comment