பசிக்கு உணவு கொடு.
பள்ளிக்குப் படையெடுக்கும்,
பிஞ்சுக் கால்கள்.
உடல்மறைக்க உடைகொடு.
உள்ளத்தில் தன்மானம்,
உவகையுடன் ஊற்றெடுக்கும்.
சொல்லிக்கொடு ஒருமொழி
சொந்தமெனும் தாய்மொழி.
சொல்லிக்கொடு மறுமொழி.
உள்ளுக்குள் உலகளக்க.
உலகெங்கும் சுற்றிவர.
வரலாறு படிப்பதற்கும்
வரலாறு படைப்பதற்கும்
மொழியே மூச்சுக்காற்று.
இழுத்து விடுவதே மூச்சு.
திணித்து அழுத்திடின்
மொத்தமும் போச்சு.
மொழியைத் திணிப்போர்க்கு
விழிகளில் ஈரமில்லை.
மனசுக்குப் பிடித்தமொழி
மனமே மடிதேடும்.
விரும்பும் மொழியனைத்தும்
எறும்பறிந்த இனிப்பே.
திணிக்கும் இனிமையில்
எறும்புகளை நசுக்காதீர்.
ப.சந்திரசேகரன்.