மகிழ்ச்சியில் சிறகடித்து
வானத்தில் பறப்பதற்கும்,
மாற்றான் மண்ணில்
இகழ்ச்சியுடன் விலங்கிட்டு
வானமே விரக்தியுற
விரட்டப் படுவதற்கும்,
இடைப்பட்ட காலமது ,
கண்ணில் நீர்த்திரையும்
கணக்கில் காரிருளும்
கலந்திட்டக் கதையாம்.!
எண்ணிலா கனவுகளில்
எல்லாம் அடகுவைத்து,
அன்னிய தேசத்தில்
ஆள்கடத்தல் செய்யப்பட்டு,
வாழ்க்கையைத் தொலைத்தல்
விதியெனும் நஞ்சோ,
விதிகளின் வஞ்சகமோ.?
கஞ்சிக்கு வழியின்றி
கால்நடைபோல் வாழ்வோர்கள்,
நெஞ்சு நிமிர்த்த
நெடுங்கடல் தாண்டுவராம்.!
அஞ்சியஞ்சி வாழ்தலும்
அலைக்கழிக்கப் படுதலும்,
அரசின் அலட்சியமோ
ஆசைகளின் லட்சியமோ?
உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாமோ
எனும் ஒற்றைக்கேள்வியுன்
பரிகாசப்பொருளோடு,
உயர்வுற நினைத்தோரை
துயருறச் சிறகொடித்து
தூக்கி எறிந்தனரே!
ஆணவ அன்னியரை
துணிந்துத் தூற்றவோ?
அன்றின் அறிவோடு,
வக்கற்று ஆளும்
தோள்தரா நம்மோரை,
வாள்கூர் வார்த்தைகளால்
வலியாறச் சாடுவதோ.?
எம்மக்கள் அவமானம்,
எமையாள்வோர் இயலாமை!.
ப.சந்திரசேகரன்